'சில விவகாரங்கள் சரிசெய்யப்பட்டவுடன் சிங்கப்பூர்-மலேசியா நிலம்வழி பயணங்கள் தொடங்கக்கூடும்'

'சில விவகாரங்கள் சரிசெய்யப்பட்டவுடன் சிங்கப்பூர்-மலேசியா நிலம்வழி பயணங்கள் தொடங்கக்கூடும்'

1 mins read
94c2fd09-4759-4f15-a921-110e63358fbe
கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தில் தினமும் 200,000 முதல் 300,000 பயணிகள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் (விடிஎல்) திட்டத்தை மலேசியா சிங்கப்பூருடன் இம்மாதம் 29ஆம் தேதிமுதல் தொடங்கவிருப்பதாக இவ்வாரம் அறிவிக்கப்பட்டது.

இதனால், பயணம் செய்வோருக்கு இரு நாடுகளிலும் தனிமை உத்தரவு இருக்காது. இரு நாடுகளுக்கும் இடையே பயணங்களைத் தொடங்குவதன் முதல்படி இது என்று இன்று (நவம்பர் 11) நேர்காணல் ஒன்றில் சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் அஸ்ஃபர் முகம்மது முஸ்தஃபார் குறிப்பிட்டார்.

சுகாதாரம், பரிசோதனைத் திட்டம், எல்லை தாண்டிய செயல்முறைகள் போன்ற அம்சங்களில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நிலம்வழியிலான எல்லைகளைத் திறப்பது 'விடிஎல்' திட்டத்தைக் காட்டிலும் சற்று சிக்கலானது என்றார் அவர்.

கொவிட்-19க்கு முந்திய காலகட்டத்தில் தினமும் 200,000 முதல் 300,000 பயணிகள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்தனர்.

தற்போதைய நிலையில் இதை எதிர்பார்க்க முடியாது என்று டாக்டர் அஸ்ஃபர் கூறினார். ஒவ்வொரு நாளும் பயணிகள் எண்ணிக்கையில் வரம்பு இருக்கும் என்றார் அவர்.

ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து மூலம் நிலம்வழிப் பயணங்கள் தொடங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, எளிதில் சமாளிக்கக்கூடிய நிலை அது என்று அவர் பதிலளித்தார்.