வருகைப் பதிவுக்கான 'டிரேஸ்டுகெதர்' செயலியின் பயன்பாடு இனி மேலும் துரிதமாக, தெளிவானதாக அமையும். மேம்படுத்தப்பட்டுள்ள 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயன்படுத்துவோர், 'சேஃப்என்ட்ரி' வருகைப் பதிவு செய்துகொண்டு ஓர் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவது மேலும் எளிமையாக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடப்பட்டுள்ளதைக் குறிக்க 'டிக்' குறியுடன் கூடிய தடுப்பூசி சின்னம் ஒன்று, கைபேசித் திரையின் இடது மேல் புறத்தில் இடம்பெறும். கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டவரது கைபேசித் திரையில் 'டிக்' குறியிடப்பட்ட ஒரு பரிசோதனைச் சின்னம் இருக்கும்.
மேலும், செயலியின் பச்சை நிறப் பின்னணியை வருகையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் பணியாளர்கள், தொலைவிலிருந்து பார்த்தவாறு உடனுக்குடன் அந்த நபர்களை ஓர் இடத்திற்குள் அனுமதிக்க இயலும்.
சிலர் கைபேசித் திரையைப் படம்பிடித்து அதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், 'டிரேஸ்டுகெதர்' செயலியின் திரையில் அசைந்துகொண்டே இருக்கும் நீர்நாயைக் கொண்டு வருகையாளரது விவரங்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்தப்படும்.
இத்தகைய புதிய அம்சங்களை, மேம்படுத்தப்பட்ட டிரேஸ்டுகெதர் செயலியின் பதிப்பு 2.11ஐப் பதிவிறக்கம் செய்வோரால் பயன்படுத்த முடியும் என்று டிரேஸ்டுகெதர் இணையத்தளத்தில் நேற்று அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்) தெரிவித்தது.
பழைய பதிப்பைப் பயன்படுத்துவோர் உடனே இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம்.
பச்சை நிறத்துப் பின்னணியைத் தவிர, வெள்ளை நிறப் பின்னணியை ஒருவரது செயலி காட்டவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரின் செயலியிலும் கொவிட்-19 பரிசோதனை முடிவு இன்னும் தெரிவிக்கப்படாதவர் செயலியிலும் இத்தகைய வெள்ளை நிறப் பின்னணி இருக்கும்.
இக்குறிப்பிட்ட பிரிவினர், ஓர் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கான காரணங்களையோ மருத்துவ ஆவணங்களையோ வழங்க வேண்டும்.
அத்துடன், குழு சார்பாக வருகையைப் பதிவு செய்வோரது திரையிலும் வெள்ளை நிறப் பின்னணி காட்டப்படும்.
அத்தகைய சூழலில் குழுவில் உள்ள அனைவரும் தங்களின் தடுப்பூசித் தகுதியையும் பரிசோதனை செய்துகொண்டதன் முடிவையும் சரிபார்க்கும் பணியாளர்களிடம் காட்ட வேண்டும்.
இதனால் சற்று சிரமம் ஏற்பட்டாலும் தரவு ரகசியத்தன்மை, தரவுப் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக 'கவ்டெக்' குறிப்பிட்டது.
'சேஃப்என்ட்ரி' கியூஆர் குறியீட்டை வருடி வருகையைப் பதிவு செய்வோரது திரையில் மட்டுமே இதுபோன்ற பச்சை, வெள்ளை நிறப் பின்னணி கொண்ட அட்டைகள் காண்பிக்கப்படும்.
'சேஃப்என்ட்ரி' நுழைவாயில் அருகே கைபேசியை வருடிச் செல்வோரது திரையில் இதுபோன்ற அட்டைகள் தெரியாது.
புதிய அம்சங்கள் கொண்ட 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயனாளர்கள் பலர் வரவேற்பதாகக் கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக, அசையும் நீர்நாய் அம்சம் பலரையும் கவர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், ஓர் இடத்திற்குள் அனுமதிக்கப்பட இதுபோன்ற வருகைப் பதிவுகள் அவசியமா என்று சிலர் கேள்வி எழுப்பவே செய்கின்றனர். கடந்த ஆண்டு மே 12ஆம் தேதிமுதல் 'சேஃப்என்ட்ரி' வருகைப் பதிவு சிங்கப்பூரில் கட்டாயமாக்கப்பட்டது.

