தடுப்பூசி போட்டிராத கொவிட்-19 'ஐசியூ' நோயாளிகள் $25,000 மருத்துவக் கட்டணத்தை எதிர்நோக்கக்கூடும்

தடுப்பூசி போட்டிராத கொவிட்-19 'ஐசியூ' நோயாளிகள் $25,000 மருத்துவக் கட்டணத்தை எதிர்நோக்கக்கூடும்

1 mins read
d7a3a645-affa-4f12-938a-9e452605410e
அரசாங்க மானியங்கள் மற்றும் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதி மூலம், தகுதியுடைய சிங்கப்பூரர்களுக்குக் கட்டணம் குறையும். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டிராதோர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டால், $25,000 மருத்துவக் கட்டணத்தை எதிர்நோக்கக்கூடும்.

ஆனால், கட்டணக் கழிவு மற்றும் காப்புறுதி பொருந்தினால், மருத்துவக் கட்டணம் கணிசமாகக் குறையும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவிலும் கொவிட்-19 தொடர்பாக இதர சிகிச்சையும் தேவைப்படுவோருக்கான இடைநிலை மருத்துவமனைக் கட்டணம் $25,000ஆக உள்ளது என அமைச்சு கூறியது.

"அரசாங்க மானியங்கள் மற்றும் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதி மூலம், தகுதியுடைய சிங்கப்பூரர்களுக்குக் கட்டணம் $2,000 முதல் $4,000ஆகக் குறையும்," என்று அமைச்சு விவரித்தது.

தங்களது மெடிசேவ் கணக்கிலிருந்து எஞ்சிய தொகையை நோயாளிகள் செலுத்தலாம்.

நோயாளியின் மருத்துவ நிலையின் தீவிரத்தையும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் இடத்தையும் பொறுத்து, மருத்துவக் கட்டணம் வேறுபடும் என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சொன்னார்.

தடுப்பூசி போட்டிராதோரை கொவிட்-19 தொற்றினால், டிசம்பர் 8ஆம் தேதியிலிருந்து மருத்துவக் கட்டணத்தை அவர்களே ஏற்க வேண்டும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெற்றும், அதைப் போட்டுக்கொள்ள விரும்பாதோரே அத்தகையோர். அவர்களே, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் கொவிட்-19 நோயாளிகளில் பெரும்பகுதியினராக உள்ளனர்.

ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவகாசம் வழங்கும் நோக்கில், டிசம்பர் 31ஆம் தேதிவரை அவர்களுக்கு மருத்துவமனைக் கட்டணம் விதிக்கப்படாது.