பாதுகாவல் துறையினர் 2022 முதல் 2028 வரை 6.6% வருடாந்திர சம்பள உயர்வைப் பெறுவர்.
இத்துறையில் ஊதிய உயர்வு குறித்து முத்தரப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம், சிங்கப்பூரில் உள்ள 265 நிறுவனங்களின் பணிபுரியும் ஏறக்குறைய 40,000 பாதுகாவல் துறை ஊழியர்கள் பயனடைவார்கள்.
குறைந்த சம்பளம் பெறும் பாதுகாவல் அதிகாரிகளின் அடிப்படை மாதச் சம்பளம் 2023ல் $1,650ல் ஆகி, 2028க்குள் $3,530 ஆக இருமடங்காக அதிகரிக்கும்.
இதே காலகட்டத்தில் மூத்த பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளம், $2,240இலிருந்து $4,430ஆக உயரும்.
ஒட்டுமொத்தத்தில், சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்கான படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ், பாதுகாவல் துறையினர் அடுத்து ஆறு ஆண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் 6.6% ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.
இது முந்தைய பரிந்துரைகளின்கீழ் நவம்பர் 2017இல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச 3% வருடாந்திர அதிகரிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
மாதாந்திர மொத்தச் சம்பளம் அடிப்படை ஊதியத்தையும் 72 மணிநேர மிகைநேர வேலையையும் உள்ளடக்கும்.
கூடுதல் வேலை நேரம் இன்றி, நிலையான சம்பள உயர்வின் அவசியத்தையும் பாதுகாவல் துறை முத்தரப்புக் குழுமம் (எஸ்டிசி) குறிப்பிட்டது.
வரும் 2024ஆம் ஆண்டு முதல், பாதுகாவல் துறை அதிகாரிகளுக்கான படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ், அடிப்படைச் சம்பளம், தொழில்துறையின் வழக்கமான வாரம் 44 மணி நேர வேலையுடன், கூடுதல் நேரம் செய்யப்படும் வேலைக்கான ஊதியத்தையும் சேர்க்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
மேலும், பாதுகாவல் அதிகாரிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாக, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 72 மணிநேரம் மட்டுமே மிகைநேர வேலை வரம்பும் பரிந்துரைக்கப்பட்டது.
"பாதுகாவல் அதிகாரிகள் குறைந்த ஊதியத்தில், வாரத்தில் ஆறு நாட்கள் 12 மணி நேர மாறுநேரப் பணியைச் செய்வதால் திறனாளர்களை ஈர்ப்பதும் தக்கவைத்துக்கொள்வதும் கடினம்," என்றார் சிங்கப்பூர் பாதுகாவல் துறை சங்கத்தின் தலைவரான திரு ராஜ் ஜோசுவா தாமஸ்.
பாதுகாவல் துறை அதிகாரிகளை மலிவான வளங்களாககருதக்கூடாது என்றார் அவர்.
அதேநேரத்தில் சேவை பெறுவோர் தொழில்நுட்பப் பயன்பாடு மூலம் மனிதவள எண்ணிக்கையைக் குறைத்து அதிகரிக்கும் கட்டணத்தைச் சமாளிக்கலாம் என்றார் அவர்.
பாதுகாவல் துறையின் தரத்தை மேம்படுத்துவது, தொழில்நுட்பப் பயன்பாடு, திறன் மேம்பாடு மூலம் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகியவற்றுக்கும் பாதுகாவல் துறை முத்தரப்புக் குழுமம் பரிந்துரைத்துள்ளது.
தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவும், உற்பத்தி மற்றும் சேவைகளை மேம்படுத்த வேலை மறுவடிவமைப்பு அல்லது பிற வழிகளை ஆராயவும் சேவை வழங்குநர்களுக்கு அது அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாவல் துறை ஊழியர்களும் புதிய திறன்களையும் பணி செயல்முறைகளையும் கற்றுக்கொள்வதில் நேர்மறையான மனநிலையைக் கடைப்பிடித்து திறன்மேம்பாட்டைப் பெறவேண்டும் என்றும் கூறியது.
பொதுமக்களும் குடிமை உணர்வுடன் அனைவரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் கடமைகளைச் செய்யும் முன்களத்தில் பணியாற்றும் பாதுகாவல் அதிகாரிகளை மதிக்க வேண்டும் என்று முத்தரப்புக் குழுமம் வலியுறுத்தியது.
மனிதவள அமைச்சும் உள்துறை அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், இப்பரிந்துரைகள் சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ளதாகக் கூறின.
மேலும் இப்பரிந்துரை குறைந்த வருமான ஊழியர்களை மேம்படுத்தவும் பாதுகாவல் தொழிலை மாற்றியமைக்கவும் முத்தரப்பின் முயற்சிகளை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.