அனைத்துலகப் பயணிகளுக்கு இந்தியாவின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

அனைத்துலகப் பயணிகளுக்கு இந்தியாவின் புதிய வழிகாட்டி நெறிமுறைகள்

1 mins read
e5167e1c-8e00-4a2a-81c9-d782cbeaddf6
விதிமீறும் பயணிகள் விமானத்தைவிட்டு இறக்கிவிடப்படலாம் என்றும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: இந்தியா செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கு அந்நாடு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அண்மைய பயண ஆலோசனைக்குறிப்பின்படி, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, புறப்பாட்டிற்கு முன்னரும் வருகைக்குப் பின்னரும் எடுக்கப்பட வேண்டிய கொவிட்-19 பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், விமான நிலையத்தை வந்தடைந்தபின் அல்லது இல்லத் தனிமைக் காலத்தின்போது கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

இந்திய அரசாங்கம் வகுத்துள்ள கொவிட்-19 நெறிமுறைகளின்படி, பயணத்தின்போது எல்லா நேரங்களிலும் எல்லாப் பயணிகளும் மூக்கையும் வாயையும் மறைக்கும் வகையில் முகக்கவசம் அணிந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு, விமானத்தினுள் முறையாக முகக்கவசம் அணியாதவர்கள் அல்லது வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் பயணிகள் விமானத்தைவிட்டு இறக்கிவிடப்படலாம் என்றும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு இணங்கி நடக்கத் தவறுவோர்மீது குடிமை விமானப் போக்குவரத்து விதிகள் பிரிவு 3ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இதற்கிடையே, வழக்கம்போல் விமானங்களை (scheduled flight) இயக்கும் நடைமுறையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் துபாயில் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்