கொவிட்-19 சூழலில் 4,200 மாணவர்களுக்கு உதவிக்கரம்
இர்ஷாத் முஹம்மது
கொவிட்-19 சூழலில் இந்திய சமூகத்தில் உதவி தேவைப்படும் மாணவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களை நாடிச் சென்று உதவும் முயற்சிகளை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) முடுக்கி விட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு சிண்டாவின் 'மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்' திட்டத்தின்கீழ் 4,200 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
வருடாந்திர உதவி பெறும் இந்தத் திட்டத்தில், சென்ற ஆண்டு பலன் பெற்ற 3,500 மாணவர்களைவிட இது 700 அதிகம்.
"சிண்டாவின் மிகப்பெரிய வெற்றியாக இதைக் கருதுகிறோம். இத்தனை பேரை அடையாளம் கண்டதில் மகிழ்ச்சி என்றாலும் இத்தனை ஆண்டுகளாக இவர்களை அடையாளம் காணமுடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு. இருப்பினும் இது நல்ல தொடக்கமே," என்று இந்த முயற்சி குறித்து விளக்கினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
இவ்வாண்டு முதல்முறையாக உதவி பெற்றவர்களில், திருவாட்டி நிசாவின் (உண்மைப் பெயர் அல்ல) பேத்தியும் ஒருவர். 2020ஆம் ஆண்டில் சிண்டாவின் வேறொரு திட்டம் மூலம் எட்டுப் பேரப்பிள்ளைகளை வளர்க்கும் இந்தப் பாட்டி சிண்டாவிற்கு அறிமுகமானார். அவரது இரு மகள்களும் சிறைவாசம் அனுபவித்து வருவதால் பேரப்பிள்ளைகளை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் இவர் சுமக்கவேண்டிய நிலை.
எட்டுப் பிள்ளைகளைத் தனியே வளர்ப்பதில் பெரிதும் கஷ்டப்படும் தமக்கு இந்த பற்றுச் சீட்டு மிகவும் ஆறுதலாக உள்ளதாக அவர் கூறினார்.
சமூகம், அரசாங்கம் உட்பட பலதரப்பு முயற்சிகள் காரணமாக கல்வித் தேர்ச்சியில் இந்திய சமூகம் மேம்பாடு கண்டு வருவதாவும், இது சமூகத்தின் மேம்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் சிண்டாவின் தலைவரான அமைச் சர் இந்திராணி ராஜா கூறினார்.
சமுதாயத்தின் அனைவரது நிலையையும் சமநிலைக்கு உயர்த்தும் தன்மை கல்விக்கு உண்டு என்று நேற்றைய நிகழ்ச்சியில் அவர் சொன்னார்.
இந்தியப் பிள்ளைகளுக்கு சரியான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வது சமூகத்தின் ஒருமித்த பொறுப்பு என்றார் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா.
பள்ளிகள் உட்பட பங்காளித்துவ சமூக சேவை அமைப்புகள், இதர அமைப்புகளின்மூலம் உதவி தேவைப்படுவோரை அடையாளம் காண சிண்டா முனைந்தது.
வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளின் மதிப்பும் இவ்வாண்டு கூட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுவரை ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகம், துணைக் கல்வி பொருட்கள் வாங்குவதற்காக $120 'பாப்புலர்' நிறுவனத்தின் பற்றுச்சீட்டுகளும் காலணிகள் வாங்க $60க்கான 'பாட்டா' பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
இவ்வாண்டு $140 பாப்புலர் பற்றுச்சீட்டுகளும் $60 பாட்டா பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
"பற்றுச்சீட்டு மதிப்பை சற்று அதிகரித்தால் மேலும் உதவியாக இருக்கும் என்றும் அதற்கான காரணங்களையும் சில மாணவர்கள் முன்வைத்தபோது அவை நியாயமான கோரிக்கைகளாகவே இருந்தன," என்று திரு அன்பரசு ேமலும் கூறினார்.
"இதைப் பெரிய செலவாகப் பார்க்காமல் நல்ல முதலீடாகக் கருதவேண்டும்," என்றார் அவர்.
தமது உரையில் சிண்டாவின் செயல்பாடுகளை விவரித்த அவர், பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.
"பொருளாதார சிக்கல் உட்பட மற்ற சவால்களை ஓரளவு நிவர்த்தி செய்ய சிண்டா உள்ளது. பெற்றோராக உங்கள் கடமையைச் செய்யுங்கள். உங்கள் பிள்ளை விழும்போது தூக்கிவிடுங்கள். உற்சாகமான வார்த்தையைச் சொல்லுங்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங் களைச் செய்யுங்கள்," என்றார்.
இந்தத் திட்டத்தைத் தவிர்த்து மேலும் பல வழிகளில் குடும்பங்களுக்கு சிண்டா உதவி வருகிறது.
சிண்டாவின் பற்றுச்சீட்டுகள் மூலம் ஆண்டுதோறும் பள்ளி திறக்கும்போது புதிய சீருடைகள், புத்தகப் பை, துணைப்பாட நூல்கள், எழுதுகோல் என எல்லாவற் றோடும் பள்ளிக்குச் செல்ல பத்து வயது லுகேஷ், லோகேந்திரா இரட்டையரால் முடிகிறது.
ஒற்றைப் பெற்றோராக நான்கு பிள்ளைகளை வளர்த்து வரும் தாயார் ஷாமலா மாசிலாமணியால், பிள்ளைகளின் இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடினம் என்றாலும் அதற்காக முன்வந்த சமூகத்திற்கு நன்றி கூறினார்.
தேடிச் சென்று உதவும் சிண்டாவின் முயற்சிகள் அதிகரித்திருப்பைப் பாராட்டிய, உதவி பெற்ற நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளி மாணவி ரேச்சலின் தாயான திருவாட்டி ரஞ்சினி இந்தப் போக்கு மிகவும் நம்பிக்கையளிப்பதாகக் கூறினார்.

