மலேசியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டின் அக்டோபர் 28ஆம் தேதி வரை மலேசியாவில் பதிவான கொவிட்-19 மரணங்களில் 37.3 விழுக்காடு, மரணமடைந்த 10ல் நால்வருக்கு நீரிழிவு நோய் பின்னணி இருந்தது.
கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட இதே நிலைதான். அப்போது பதிவான கொவிட்-19 மரணங்களில் 38.3 விழுக்காடு மரணங்கள் நீரிழிவுடன் தொடர்புடையதாக இருந்தன என்று அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் ஃபெய்சுல் இட்ஸ்வான் முஸ்தஃபா கூறினார்.
"உலகளவில் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாத நோயுடன் வாழும் மக்களே கொவிட்-19 கிருமித் தொற்றுக்கும் அதனால் ஏற்படும் மரணத்திற்கும் எளிதாக ஆளாகிறார்கள்.
"அதிலும் நீரிழிவுடன் வாழ்வோர் குறிப்பாக, நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தவறியோர் கொவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்," என்று அவர் 'சண்டே ஸ்டார்' செய்தித்
தாளிடம் தெரிவித்தார்.
நீரிழிவு நோயாளி கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும்போது அவருக்கு உடல் எரிச்சல் போன்ற கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவில் 3.9 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கள்
தொகையில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவுடன் வாழ்வதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் தங்களுக்கு நீரிழிவு இருப்பதை அறியாதவர்களாக உள்ளனர் என்று சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்ட வேளையில் பொதுமக்கள் நீரிழிவின் அபாயத்தை உணர்ந்து அதற்கான பரிசோதனைகளை முன்கூட்டியே செய்துகொள்ள வேண்டும் என்று மலேசிய நீரிழிவுத் துறை துணைத் தலைவர் ஜோங் கோய் சோங் வலியுறுத்தி உள்ளார்.
மலேசியாவில் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இளைய தலைமுறையினரிடம் காணப்படும் நீரிழிவு கடந்த 15 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இளவயதுப் பிரிவினரிடமும் நீரிழிவு அதிகரித்து வருவதாக மலேசிய மருத்துவ சங்கத் தலைவர் கோ கர் சாய் தெரிவித்துள்ளார்.
குழந்தைப் பருவ உடற்பருமன் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
"எனவே உடற்பருமனை நன்கு கண்காணித்து அதனைக் கட்டுக்குள் வைக்க ஆண்டுதோறும் சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ள வேண் டும். குறிப்பாக, குழந்தைகளுக்குப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.
மலேசியாவில் தொற்று இல்லாத நோய்களில் உயர் ரத்த அழுத்தம் முக்கியமானது என்று கூறிய அவர் நாட்டின் பத்தில் மூவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சுகாதார, நோயறிதல் ஆய்வின் முடிவுப்படி மொத்த மக்கள்தொகையில் 6.4 மில்லியன் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த தாக மதிப்பிடப்பட்டது.