முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரே குடும்பத்தினர் ஐந்து பேர்வரை சேர்ந்து உணவகங்களில் சாப்பிட இப்போது அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏற்பாடு, நவம்பர் மாத முடிவில் இருந்து உணவங்காடிக் கடைகளுக்கும் காப்பிக்கடைகளுக்கும் நீட்டிக்கப்படும்.
உணவங்காடிக் கடைகளிலும் காப்பிக்கடைகளிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் போடாதவர்களுக்கும் வேறுபட்ட நடைமுறையை அமல்படுத்துவதன் தொடர்பில் அந்தக் கடைக்காரர்களுடன் தான் செயல்பட்டு வருவதாக நேற்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அங்கு செல்பவர்கள் 'சேஃப் என்ட்ரி' மூலம் உள்ளே செல்ல வேண்டும். முதலில் சில உணவங்காடி நிலையங்களில் இம்மாதம் முடிவதற்கு முன்பாகவே இத்தகைய நுழைவுக் கட்டுப்பாடுகளும் சோதனை முறைகளும் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு கூறியது.
இதன் தொடர்பில் உணவங்காடிக் கடைக்காரர்கள் சங்கம், நகரமன்றங்களுடன் தேசிய சுற்றுப்புற வாரியம் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சு தெரிவித்தது. எஞ்சிய உணவங்காடி நிலையங்களில் இதேபோன்ற ஏற்பாடு பிறகு இடம்பெறும்.
இதனிடையே, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டுத் தேவைகள், அனுமதிக்கப்படுவோரின் அளவு ஆகியவற்றைத் தளர்த்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் நடப்புக்கு வந்துள்ளதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று நடந்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்வேளையில், சிங்கப்பூர் இப்போதைய கொவிட்-19 நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமா என்பதன் தொடர்பில் அடுத்த வாரத் தொடக்கத்தில் புதிய தகவல்கள் இடம்பெறக்கூடும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
அத்தகைய நிபந்தனைகள் நவம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. சமூக ஒன்றுகூடலில் அதிகபட்சமாக இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி என்ற விதியும் இப்போது நடப்பில் உள்ள விதிமுறைகளில் அடங்கும்.
1. குடும்ப உறுப்பினர் ஐவர் சேர்ந்து உணவங்காடி, காப்பிக்கடைகளில் சாப்பிடலாம்; 2. விலை குறைந்த, சுயபரிசோதனைக் கருவிகள் விரைவில்;
3. தடுப்பூசி அடிப்படை யிலான வேறுபட்ட புதிய பாதுகாப்பு நடைமுறை;
4. சிறாருக்குத் தடுப்பூசி கொள்முதல்; 5. விடிஎல் பயண ஏற்பாடு நீட்டிப்பு; 6. வெளிநாட்டு ஊழியர் கட்டுப்பாடுகள் தளர்வு
கொவிட்-19 பணிக்குழு அறிவித்த
ஆறு அம்சங்கள்:-