தங்களுக்கிடையே சச்சரவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதே மற்ற உலக நாடுகளுக்குத் தாங்கள் கொண்டுள்ள கடப்பாடு ஆகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தங்களின் சந்திப்பின்போது நேற்று வலியுறுத்தி இருந்தனர்.
"சீனா-அமெரிக்கா இடையே போட்டித்தன்மை, மோதலாக மாறக்கூடாது. திட்டமிட்டதாகவோ திட்டமிடாததாகவோ இருந்தாலும் அந்தப் போட்டித்தன்மை சச்சரவாக மாறாமல் இருப்பதை சீன, அமெரிக்கத் தலைவர்களான நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்," என்றார் திரு பைடன்.
அத்துடன் இது எளிமையான, வெளிப்படையான போட்டி மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கொள்ளைநோய் எங்கு, எவ்வாறு தொடங்கியது, வர்த்தகப் போட்டித்தன்மை விதிமுறைகள், விரிவடைந்து வரும் சீனாவின் அணுவாயுதக் கிடங்குகள், தைவான் மீது சீனாவின் அதிகரித்த அழுத்தம் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
அமெரிக்காவும் சீனாவும் உலகின் ஆகப்பெரிய பொருளியல்களைக் கொண்டுள்ள நாடுகள். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்களாகவும் அவை உள்ளன என்று குறிப்பிட்ட அதிபர் ஸி, பைடனை 'நீண்டநாள் நண்பன்' என்று சந்திப்பின்போது அழைத்தார்.
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் அதிகமான சவால்களைச் சமாளிப்பதற்குத் தொடர்பும் ஒத்துழைப்பும் கூடுதலாக வேண்டும் என்றார்.
"சீனாவும் அமெரிக்காவும் ஒன்றையொன்று மதித்து நடக்க வேண்டும், அமைதி நிலவும் வகையில் ஒன்றாகச் செயல்பட வேண்டும், அனைவருக்கும் பலன் கிட்டும் ஒத்துழைப்பை நாட வேண்டும்," என்று மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தெரிவித்தார் அதிபர் ஸி. ஆக்கபூர்வமான திசையை நோக்கி இரு நாடுகளும் செல்ல, தாம் முக்கிய படிகள் எடுக்கத் தயாராக இருப்பதாகவும் திரு ஸி கூறினார்.
கடந்த ஆண்டு அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, சீன அதிபருடன் நடந்த முதல் சந்திப்பு இது. இதற்கிடையே, தைவான் என்ற சிவப்பு கோட்டைத் தாண்ட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் அதிபர் ஸி விடுத்தார்.