பிப்ரவரி முதல் வீடு வீடாகச் சென்றும் தொலைபேசி வாயிலாகவும் ஆதரவு
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் இருந்தும் அதில் சிரமங்களை எதிர்நோக்கும் மூத்தோர், ஏஐசி எனப்படும் ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவையின் உதவியை நாடலாம்.
எளிதில் ஆபத்தில் சிக்கக்கூடிய பிரிவினரை கொவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து காக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த உதவி நடவடிக்கையில் முகவை ஈடுபட்டு வருகிறது.
முகவையின் மக்கள் நாடும் பிரிவான மூத்த தலைமுறை அலுவலகம் (எஸ்ஜிஓ) இவ்வாண்டின் பிப்ரவரி மாதம் முதல் 670,000க்கும் அதிகமான மூத்தோரை அணுகி உள்ளது.
60 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோர் பாதுகாப்பான முறையில் கொவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும் சிரமத்தை எதிர்நோக்குவோரை தடுப்பூசி போட அழைத்துச் செல்வதும் அது மேற்கொண்ட முயற்சிகள்.
பெரும்பாலும் வீடு வீடாக நேரடியாகச் சென்றும் தொலைபேசி வாயிலாகவும் மூத்தோர் நாடப்பட்டனர்.
"கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீளும் நாடாக சிங்கப்பூர் மாறிவரும் நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்த குடிமக்கள் உடனடியாக அதனைப் போட்டுக்கொள்ளுமாறு தீவிரமாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.
"தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோர் அதிகமான நடமாட்டத்தில் பாதுகாப்புடன் ஈடுபட முடியும். மூத்தோருக்கான தனிப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கலாம்.
"குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பாதுகாப்பான முறையில் உணவகங்
களுக்குச் சென்று அவர்கள் சாப்பிடலாம். தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை உணவங்காடி நிலையங்களும் காப்பிக் கடைகளும் அமல்படுத்துவதால் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூத்தோருக்கு வசதி ஏற்படும்," என்று ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை நேற்று தனது அறிக்கையில் தெரிவித்தது.
தடுப்பூசி நிலையத்திற்குச் செல்ல நடமாட்டப் பிரச்சினையை எதிர்நோக்கும் மூத்தோருக்கும் அவர்களைத் தடுப்பூசி நிலையத்திற்குக் கூட்டிச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் மூத்தோரின் பராமரிப்பாளர்களுக்கும் எஸ்ஜிஓ உதவிக்கரம் நீட்டும்.
மூத்தோரை அருகில் உள்ள தடுப்பூசி நிலையத்திற்கு அழைத்துச் செல்வது அல்லது அவர்களின் வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடுவது ஆகியவற்றில் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தோர் ஈடுபடுவர். இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட முதியோர் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவும் முகவை கேட்டுக்கொண்டுள்ளது.
கொள்ளைநோயால் ஏற்படும் கடுமை யான உடல் பாதிப்பிலிருந்து காப்பதோடு நீண்டகாலத்திற்கு மேம்பட்ட பாதுகாப்பை பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் என்றது அது.
கூட்டங்களைத் தவிர்க்குமாறும் தேவை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவ
மனைகளுக்கு வருகையளிக்குமாறும் முகவை வலியுறுத்தியுள்ளது. நோய் தொற்றினாலும் அறிகுறி இல்லாத, மித மான அறிகுறி உடைய மூத்தோர் வீட்டிலேயே குணமடையலாம்.
வீட்டிலேயே குணமடையும் முதியோருக்கு உதவ சிங்கப்பூர் ஆயுதப்படையுடனும் இதர அமைப்புகளுடனும் எஸ்ஜிஓ இணைந்து பணியாற்றி வருகிறது.