சிங்கப்பூர் மக்களிடம் ஆரோக்கியம் குறைந்துவிட்டதால் அடுத்து வரும் மாதங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை தீவிரப் படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அது, நீரிழிவுக்கு எதிரான ஐந்தாண்டு போர்போல இருக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்பட்ட நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அதிகரித்துள்ளதை அண்மைய தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு தெரிவிக்கிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் மக்களிடம் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. கொள்ளை நோய் சூழலில் உடல் ஆரோக்கியம் மேலும் குறைந்ததால் நிலைமை மேலும் மோசமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சிங்கப்பூர் மக்களிடம் தற்போது காணப் படுகின்றன சில ஆரோக்கியமற்ற போக்குகள் கவலையளிக்கும் விதத்தில் இருப்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.
இரண்டு ஆண்டுகளிலேயே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது விழுக்காடு கூடியுள்ளது. 2017ல் 24.2 விழுக்காடாக இருந்த இந்தப் பிரச்சினை, 2020 மார்ச் மாதம் முடிந்த எட்டு மாத ஆய்வுக்குள் 35.5 விழுக்காட்டுக்கு அதிகரித்துவிட்டது.
நீரிழிவு நோய்க்கு எதிரான ஐந்தாண்டு போருக்குப் பிறகும் அதே காலகட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் விகிதம் 8.8 விழுக்காட்டிலிருந்து 10.5 விழுக்காட்டுக்கு கூடியுள்ளது. குறிப்பாக இளையர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓய்வு நேர பயிற்சி களில் ஈடுபட்டுள்ளனர். இது, 2017ல் இருந்த 29.4 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.
புகைபிடிக்கும் பழக்கமும் குறைந்துள்ளது. புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டதற்கு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் 11.8 விழுக்காட்டிலிருந்து 10.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வு, 2019 ஜூலைக்கும் 2020 மார்ச்சுக்கும் இைடயே நடத்தப்பட்டது. 6,000 பேரிடம் நேர்காணல், 5,000 பேரின் சுகாதாரப் பரிசோதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு பற்றி கருத்துரைத்த சுகாதார அமைச்சு, தற்போதைய கொள்ளைநோய் சூழலில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சிங்கப்பூரர்கள் பின்பற்றுவது அவசியம் என்று நினைவூட்டியது.
பொதுமக்களிடம் ஆரோக்கியமான பழக்கத்தை மேம்படுத்த தேசிய நடை சவால் போன்ற சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
உதாரணமாக, உயர் ரத்த அழுத்தத்திற்கு எதிராகப் போராட தேசிய அளவில் உப்பு குறைவான உணவை உட்கொள்ளும் பிரசாரம் தொடங்கப்படும்.
இதற்காக சுகாதார மேம்பாட்டு வாரியம், உப்பு குறைவான சாறு மற்றும் சுவையூட்டிகளை நிறுவனங்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். இது குறித்த விவரங்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படும்.
அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் புதிய விவரப்பட்டியலை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும்.
அவற்றின் மூலம் பானங்கள் எவ்வளவு சத்தானது என்பதை பயனீட்டாளர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் ஆரோக்கியமற்ற குளிர்பானங்களின் விளம்பரங்களை தடை செய்யவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
"உடல் ஆரோக்கியம் தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பாக இருப்பதால் ஆரோக்கியமான நாடு என்ற நிலையை அடைய ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும்," என்று சுகாதார அமைச்சு ேகட்டுக் கொண்டது.

