உணவகங்களிலும் உணவு, பான நிலையங்களிலும் நாளை மறுநாள் 22ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த, கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் சேர்ந்து உண்ணலாம்.
அத்துடன், சமூக ஒன்றுகூடல்களிலும் அதிகபட்சம் ஐவர் இடம்பெறலாம். இல்லங்கள் நாளொன்றுக்கு ஐந்து வருகையாளர்கள்வரை வரவேற்கலாம். இப்போதைக்கு இந்த வரம்பு இரண்டு பேராக இருக்கிறது.
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் இந்க் கட்டுப்பாட்டுத் தளர்வு 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமையில் இருந்து நடப்பிற்கு வரும். வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனரா என்பதைச் சோதித்து அனுமதிக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் காப்பிக்கடைகளுக்கும் மட்டுமே இந்தத் தளர்வு பொருந்தும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனரா என்பதைச் சோதித்து, அனுமதிக்கும் முறை நடப்பில் இல்லாத உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக்கடைகளிலும் அதிகபட்சம் இருவர் மட்டுமே சேர்ந்து உண்ண முடியும்.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு இன்று சனிக்கிழமை மெய்நிகர் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த அறிவிப்பினை வெளியிட்டது.