ப. பாலசுப்பிரமணியம்
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் நாளை முதல் அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக உணவகங்களில் அமர்ந்து உணவருந்தலாம். அவர்கள் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் இந்தத் தளர்வுகள் வரும் செவ்வாய்க் கிழமை முதல் நடப்புக்கு வரும்.
வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களா என்பதை அக்கடைகள் உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இருவர் மட்டுமே சேர்ந்து உணவருந்த முடியும்.
மேலும், நாளை முதல் ஐவர் வரை ஒன்றுகூடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாளுக்கு அதிகபட்சம் ஐந்து விருந்தினர்களை வீட்டுக்கு அழைக்கலாம். இதற்கு முன், இரு விருந்தினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக் குழு செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், ஒட்டுமொத்த கொவிட்-19 நிலவரம் சீராக இருப்பதோடு வார தொற்று வளர்ச்சி விகிதம் ஒன்றுக்கும் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதால், தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நிலையில் சிங்கப்பூர் உள்ளது என்றார்.
அத்துடன், கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சீராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் கான், இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தங்களது நலனுக்காக முடிந்தவரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வீடுகளுக்குச் செல்வோர் அவர்களைச் சந்திக்கும் முன், கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டுவிட்டு செல்லும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
"விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை சிலர் விரும்
பினாலும், இதனை மிகப் பாதுகாப்புடன், படிப்படியாகச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்பாராத இடையேறுகளைத் தவிர்க்க முடியும் என நம்புகிறோம்," என அமைச்சர் கான் தெரிவித்தார்.
முடிந்தவரை தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப் படுத்தாமல் இருக்க அமைச்சுகள் நிலை பணிக் குழு முயற்சி செய்யும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
"சுற்றுலாத் தளங்களில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையை உயர்த்துவது வேலையிடக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், அடுத்த மாத இறுதியில் மேலும் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பணிக் குழு பரிசீலனை செய்யும்," என்று திரு வோங் கூறினார்.