சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தடுப்பூசி பயணத்தடத் திட்டம் நவம்பவர் 29ஆம் தேதியன்று தொடங்கும். சென்னை, டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு விமானப் பயணங்கள் இத்திட்டத்தின்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளன.
குறுகிய கால வருகையாளர்கள், நீண்ட கால வருகையாளர்களுக்கான விண்ணப்பங்கள் சிங்கப்பூர் நேரப்படி நாளை (திங்கட்கிழமை நவம்பர் 22) மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி பயணத்தடத் திட்டத்தில் இல்லாத விமானச் சேவைகளையும் விமான நிறுவனங்கள் இயக்கலாம். ஆயினும், இத்தகைய விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள், தற்போதுள்ள பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
“தடுப்பூசி பயணத்தடத்திட்டத்தின் கீழுள்ள விமானப் பயணங்களையும் அல்லாத பயணங்களையும் விமான நிலையங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கும்,” என்றும் ஆணையம் தெரிவித்தது.