அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், வாக்கிஷா நகரில் நடந்த விடுமுறை நாள் கிறிஸ்மஸ் பேரணியில் வேகமாக வந்த ஒரு கார் புகுந்து பலரையும் முட்டி மோதித் தள்ளியதில் ஐவர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காரை ஓட்டியவர் கைது செய்யப்பட்ட தாகவும் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வாக்கிஷா நகர போலிஸ் தலைவர் டேன் தாம்சன் தெரிவித்தார்.
"பேரணியில் சென்ற பலரையும் அவ்வாகனம் இடித்துச் சென்றது. அவர்களில் சிலர் குழந்தைகள். இச்சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்ட வர்கள் காயமடைந்தனர்," என ஃபேஸ்புக் பக்கத்தில் திரு தாம்சன் குறிப்பிட்டார்.
அது பயங்கரவாதத் சம்பவமா எனத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
காரை ஓட்டி வந்தவரிடம் ஆயுதம் இருந்ததாகத் தெரியவில்லை என்றும் காரை தடுத்து நிறுத்த அதிகாரி ஒருவர் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் போலிஸ் தலைவர் தெரிவித்தார்.
அந்தத் திடுக்கிடும் சம்பவம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.39 மணிக்கு நிகழ்ந்ததாக போலிஸ் கூறியது.
பேரணியாகச் சென்றோர் மீது மோதியபோது அந்த வாகனம் கிட்டத்தட்ட 40 மைல் (64 கிலோமீட்டர்) வேகத்தில் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.
காரை ஓட்டி வந்தவர் கூட்டத்தின் உள்ளே அங்குமிங்குமாக வாகனத்தைத் திருப்பித்திருப்பி ஓட்டி கூட்டத்தினரைக் குறிவைத்து இடித்துத் தள்ளிவிட்டு வாகனத்தை நேரே வேகமாக ஓட்டிச்சென்றார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.
சிவப்பு நிற கார் கூட்டத்திற்குள் புகுந்து பலரையும் இடித்துத் தள்ளிவிட்டு சென்றதைக் காணொளிகள் காட்டின.
இதனிடையே, சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த வெள்ளை மாளிகை, சம்பவம் நிகழ்ந்த வட்டார அதிகாரிகளுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் என்றும் குறிப்பிட்டது.