சிங்கப்பூரில் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 22) புதிதாக 1,461 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முந்திய நாளில் இந்த எண்ணிக்கை 1,670ஆகப் பதிவானது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து ஒருநாளில் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை இது. செப்டம்பர் 27ஆம் தேதி 1,647 பேர்க்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வாராந்திர தொற்று உயர்வு விகிதம் நேற்று 0.79ஆகக் குறைந்தது. நேற்று முன்தினம் ஞாயிறன்று இவ்விகிதம் 0.81ஆக இருந்தது.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைப் பயன்பாட்டு விகிதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 52.9 விழுக்காடாக இருந்த நிலையில், நேற்று அது 53.5% எனச் சற்றே கூடியது.
சிங்கப்பூரில் இதுவரை 253,649 பேரை கொரோனா தொற்றிவிட்டது.
இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 61 முதல் 105 வயதிற்குட்பட்ட மேலும் ஐவர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றி மாண்டோர் எண்ணிக்கை 667 ஆனது.