தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர 4,000 பேருக்கு அனுமதி

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர 4,000 பேருக்கு அனுமதி

1 mins read
349792c2-1ac8-45fc-a36e-1ae066fdeb3d
மலேசியாவிலிருந்து விமானத்தில் சிங்கப்பூர் வர 4,000க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஆகாயவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வர 4,000க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய 14 மணிநேரத்தில் அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் ஊடகங்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், நேற்று திங்கட்கிழமை இரவு 11.59 மணி நிலவரப்படி, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வர 4,124 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

அவர்களில் 1,792 பேர் குறுகியகால வருகையாளர்கள், 2,332 பேர் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர்.

இதற்கிடையே, இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர 1,126 பேருக்குப் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூர் வர 2,681 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 2,068 பேர் குறுகியகால வருகையாளர்கள்.