கொள்ளைநோய் பரவல் காலத்தில் உருவான கருத்து வேற்றுமைகள் நமது அரசியலைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு நிரந்தரப் பிரிவினையை ஏற்படுத்த நாம் அனுமதித்துவிடக் கூடாது என்று திரு வோங் கூறினார்.
"அதிகப் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை நாம் பெற்றிருக்கிறோம். அத்துடன் சிங்கப்பூரர் என்னும் அடையாளம் முன்னைவிட வலுவாக உள்ளது," என்ற அவர், நாட்டின் ஒற்றுமையையும் நல்லிணக்க சமூகத்தையும் பராமரிக்கும் அதேநேரம் பல்வேறு அடையாளக் குழுக்களின் தேவைகளைச் சமாளிப்பதில் சரிசம நிலையைக் கடைப் பிடிக்க ஐந்துவித அணுகுமுறைகளைப் பட்டியலிட்டார்.
1. மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துதல்: அன்றாட இருவழித் தொடர்புகள் மூலம் மனித உறவுகளைப் பலப்படுத்துவது முதல் வழி.
இவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை வளர்க்கலாம். சமூக ஒற்றுமைக்கு அது உதவும்.
2. ஒரே மாதிரியான குழுக்களை தவிர்த்தல்: ஒரே மாதிரியான மக்கள் குழுக்கள், ஒரே மாதிரியான சமூகம் என்று நம்புவது போன்றவை தொடர்பில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
இதுபோன்ற அம்சங்களில் சிறுபான்மைக் குழுக்கள் சம்பந்தப்படுகிறார்கள்.
எனவே தங்கள் வசம் உள்ள ஒரே மாதிரியான தன்மை உள்ளவர்கள் பற்றி சிங்கப்பூரர்கள் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.
3. நமது இயல்பின் சிறப்பை வரைதல்: சிங்கப்பூர் முன்னேறும் விதத்திற்கு உதாரணமாக வர்த்தக மையமாக சிங்கப்பூர் உருவான வரலாற்றை திரு வோங் சுட்டினார்.
வர்த்தகம் என்பது இருதரப்பு மரபுகள், நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாவது.
நீண்டகால இருதரப்பு வெற்றியை உருவாக்குவதன் மூலமே ஆற்றலுடன் வர்த்தகம் புரிய முடியும் என்றார் அவர்.
4. எல்லாருடைய நல்வாழ்வுக்கும் நம்பிக்கையையும் வாய்ப்பையும் ஏற்படுத்துதல்: சிங்கப்பூர் தனது எல்லாக் குடிமக்களின் நல்வாழ்வுக்கும் நியாயமான வாய்ப்பையும் நம்பிக்ைகயையும் வழங்குவதைத் தொடர வேண்டும்.
5. நியாயமான, நேர்மையான ஊழியனாக அரசு விளங்குதல்: வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் ஒரு நியாயமான, நேர்மையான தரகராக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றார் திரு வோங்.

