சிங்கப்பூர்-மலேசியா நிலவழி 'விடிஎல்': பயணச்சீட்டு வாங்க நீண்டநேரம் காத்திருப்பு

சிங்கப்பூர்-மலேசியா நிலவழி 'விடிஎல்': பயணச்சீட்டு வாங்க நீண்டநேரம் காத்திருப்பு

1 mins read
be090ca4-aa7e-4657-b4b7-c34edebdaf29
நிலவழி 'விடிஎல்' சோதனையோட்டத்தின் ஒரு பகுதியாக, ஜோகூர் பாரின் லார்கின் பேருந்து முனையத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரின் குவீன் ஸ்திரீட் முனையத்துக்கு நேற்று முன்தினம் 23ஆம் தேதி வந்த பேருந்து. படம்: சாவ்பாவ் -

சிங்கப்பூர்-மலேசியா நிலவழி தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம் (விடிஎல்) இம்மாதம் 29ஆம் தொடங்கும் என நேற்று புதன்கிழமை (நவம்பர் 24) அறிவிக்கப்பட்டது.

ஜோகூர் பாருவிற்குச் செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்ட முதல் நாளான இன்று (நவம்பர் 25), அவற்றை வாங்க பயணிகள் அலைமோதினர்.

ஒரு பேருந்துச் சேவை வழங்குநரிடம் இருந்து பயணச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்ட 20 நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்தன.

சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையே பேருந்துச் சேவை வழங்கும் இரு நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் காலை 8 மணிக்கு பயணச்சீட்டுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

பயணச்சீட்டுகளை வாங்க ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையப் பக்கத்திற்கு வந்ததால், அவர்களைக் கையாள மெய்நிகர் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டன.

அதிகரித்துள்ள தேவையைச் சமாளிக்க முடியாமல் இரு இணையப் பக்கங்களும் தடுமாறியது தெரிந்தது. பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்வதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாக சில பயனர்கள் கூறினர்.

ஒரே நேரத்தில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மெய்நிகர் காத்திருப்பு அறையில் சிலர் வைக்கப்பட்டதாக 'டிரான்ஸ்டார் டிராவல்' நிறுவன இணையப்பக்கத்தில் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய பயணிகளுக்கு 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. காலை 8.23 மணிக்கு அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.