மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று முதல் முறையாக சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணத்தின் ஒரு பகுதியாக, திரு இஸ்மாயிலும் பிரதமர் லீ சியன் லூங்கும் சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையிலான தரைவழி தடுப்பூசி பயணத்தடத்தைப் (விடிஎல்) பார்வையிடுவார்கள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலேசியப் பிரதமராகப் பதவியேற்ற திரு இஸ்மாயில், அதிபர் ஹலிமா யாக்கோப்பைச் சந்திப்பதுடன் திரு லீயுடன் அதிகாரத்துவ மதிய உணவு சந்திப்பை மேற்கொள்வார் என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்று தொடங்கும் சிங்கப்பூர் - மலேசியா தரைவழி விடிஎல் பயணம் மூலம், குடியுரிமை உள்ளவர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர் என மலேசியாவில் இருந்து ஒவ்வொரு நாளும் 1,440 பேர்வரை உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கு வரலாம், மலேசியா செல்லலாம்.
தடுப்பூசி போட்டவர்களுக்கான தரைவழிப் பயணத்தடத்தில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் கட்டாயம் ஏஆர்டி பரிசோதனை செய்ய வேண்டும்.
இன்று காலை 8 மணி முதல் இந்த விதிமுறை நடப்புக்கு வரும் என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. பி.1.1.529 எனப்படும் ஓமிக்ரான் உருமாறிய கிருமி பரவி வருவதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்தது.
உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையம், குவீன்ஸ் ஸ்திரீட் பேருந்து முனையம் ஆகிய இரண்டு இடங்களில் ஏஆர்டி பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை மையத்தில் ஏஆர்டிக்கு நேரடியாக பயணிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர், பிசிஆர் அல்லது நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் ஏஆர்டி சோதனைகளின் முடிவுகளை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் காட்டவேண்டும் என்று கடந்த புதன்கிழமை அமைச்சு தெரிவித்தது
சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்பவர்கள் லர்கின் மத்திய பேருந்து நிலையத்தில் ஏஆர்டி பரி சோதனையைச் செய்ய வேண்டும்.
இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு கிருமிப் பரிசோதனைகள் தேவையில்லை.