'ஓமிக்ரான்' எதிரொலி: சமூக அளவில் தளர்வுகள் நிறுத்திவைப்பு
புதிய 'ஓமிக்ரான்' கொவிட்-19 கிருமி காரணமாக சிங்கப்பூரில் சமூக அளவில் கூடுதல் தளர்வுகள் இப்போதைக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 2ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.59 மணி முதல், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோர்க்கான எல்லை நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
உள்ளூரில் இதுவரை ஓமிக்ரான் கிருமி கண்டறியப்படவில்லை என்றாலும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை மதிப்பிட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்), நாளை இரவு 11.59 மணியிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வந்திறங்குவோர் கூடுதல் கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அதாவது, சிங்கப்பூர் வந்திறங்கிய மூன்றாவது, ஏழாவது நாள்களில் விரைவுப் பரிசோதனை மையத்தில், மேற்பார்வையின்கீழ் தாங்களாகவே ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இப்போதைக்கு, சிங்கப்பூருக்கு புறப்படும் முன்பும் இங்கு வந்திறங்கியதும் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அடுத்ததாக, சிங்கப்பூருக்கு வரும் அல்லது சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகள், சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாள்களுக்குமுன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
தற்போது, ஹாங்காங், மக்காவ், சீனா, தைவான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவோர், புறப்பாட்டிற்குமுன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளத் தேவை இல்லை. சிங்கப்பூர் வந்திறங்கியதும் அவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டால் போதும். இந்தப் பகுதிகள் தொற்று அபாயம் குறைவாக உள்ள பகுதிகளாகக் கருதப்படுகின்றன.
மூன்றாவதாக, சிங்கப்பூர் வந்திறங்கும் பயணிகள் அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஹங்காங், சீனா, மக்காவ், தைவான் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருந்து, 'விடிஎல்' திட்டத்தைப் பயன்படுத்தாமல் இங்கு வரும் பயணிகள் இந்த விதிமுறைக்கு உட்படுத்தப்படுவர்.
தற்போது, அத்தகையோர் இல்லத் தனிமை உத்தரவு முடிவடையும்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டி உள்ளது.
சென்ற மாதம் 12-27ஆம் தேதிக்குள் சிங்கப்பூர் வந்தோரிடமும் இங்கு வருமுன் 14 நாள்களுக்குள் 'ஓமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகள் அல்லது பகுதிகளில் இருந்தோரிடமும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக ஒருமுறை மட்டும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தாய்லாந்து, கம்போடியா, ஃபிஜி, மாலத்தீவு, இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளுக்கான 'விடிஎல்' திட்டம் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"புதுவகை கிருமி பரவும் வேகம், தீவிரம் குறித்தும் அதற்கெதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்," என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது வர்த்தக, தொழில் அமைச்சரும் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான கான் கிம் யோங் கூறினார்.
கடுமையாகும் பரிசோதனை
விமானப் பயணிகள்
♦ விமானம் வழியாக சிங்கப்பூர் வரும் அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லும் பயணிகள் அனைவரும் புறப்பாட்டிற்குமுன் இரு நாள்களுக்குள் பரிசோதனை செய்துகொண்டு 'கொவிட்-19 தொற்று இல்லை' எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்
♦ சிங்கப்பூருக்கு வருபவர்கள், இங்கு வந்திறங்கியதும் பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும்
♦ 'விடிஎல்' விமானங்களில் வருவோர், இங்கு வந்தபின் 3ஆம், 7ஆம் நாள்களில் விரைவுப் பரிசோதனை மையங்களில் ஏஆர்டி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
எல்லைப்புற முன்களப் பணியாளர்கள்
♦ விமான நிலைய, எல்லைப்புற முன்களப் பணியாளர்களுக்கு வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை
♦ ஏஆர்டி சோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால் பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்த வேண்டும்
வீட்டில் குணமடைதல் இல்லை
♦ 'ஓமிக்ரான்' தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரும் அக்கிருமி தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவோரும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்
♦ நெருங்கிய தொடர்புடையோர் பிரத்தியேக இடங்களில் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்

