சிங்கப்பூரோ பாரிஸ் நகரமோ அல்ல, உலகின் ஆகச் செலவுமிக்க நகரம் இதுவே

1 mins read
06de150e-2dec-4cc3-8627-b55fc8649a2a
உலகின் ஆகச் செலவுமிக்க நகரம் பட்டியலில் ஐந்து இடங்கள் ஏறி, முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது டெல் அவிவ். படம்: ஏஎஃப்பி -

லண்டன்: உலகிலேயே ஆகச் செலவுமிக்க நகரமாக இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளது.

'இகானாமிஸ்ட் இண்டெலிஜன்ஸ் யூனிட்' இன்று (டிசம்பர் 1) வெளியிட்ட ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரும் பிரான்ஸ் தலைநகர் பாரிசும் இரண்டாம் நிலையில் வந்தன. சுவிட்சர்லாந்தின் ஸூரிக் நகரும் ஹாங்காங்கும் அதற்கு அடுத்த நிலைகளில் வந்தன.

அமெரிக்காவின் நியூயார்க்கும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் முறையே ஆறாவது, ஏழாவது நிலைகளில் வந்தன.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ், ஜப்பானின் ஒசாகா முறையே எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது நிலைகளில் வந்தன.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டிருந்த இதே ஆய்வில், சிங்கப்பூர் நான்காவது இடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த ஆண்டு பாரிஸ், ஸூரிக், ஹாங்காங் ஆகியவை கூட்டாக முதல் இடத்தைப் பிடித்திருந்தன.

உலகின் ஆகச் செலவுமிக்க நகரம் பட்டியலில் ஐந்து இடங்கள் ஏறி, முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது டெல் அவிவ்.

மொத்தம் 173 நகர்களில் பொருள், சேவை விலையை அமெரிக்க டாலரில் ஒப்பிட்டு இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இஸ்ரேலிய நாணயத்தின் மதிப்பு கூடியது, பட்டியலில் டெல் அவிவ் நகர் உயர்ந்துள்ளதற்கான காரணங்களில் ஒன்று.