மலேசியாவில் முதல் 'ஓமிக்ரான்' தொற்றுப் பாதிப்பு

மலேசியாவில் முதல் 'ஓமிக்ரான்' தொற்றுப் பாதிப்பு

2 mins read
a7f37b66-992f-4498-90ee-c11fe48a2d1c
மலேசியா-சிங்கப்பூர் 'விடிஎல்' பயணத் திட்டத்தின்கீழ், நவம்பர் 29ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள். படம்: இபிஏ -
Google News Preferred Icon

மலேசியாவில் மாணவி ஒருவருக்கு 'ஓமிக்ரான்' வகை கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வழியாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி அந்த மாணவி மலேசியா வந்திறங்கினார்.

மலேசியாவின் பேராக் மாநிலம், ஈப்போ நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அவர் பயில்கிறார். அவர் கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அந்த 19 வயது மாணவிக்கு 10 நாள் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி அந்த உத்தரவு முடிவுக்கு வந்தது.

மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

ஓமிக்ரான் வகை கிருமியை 'கவலைக்குரிய திரிபு' என்று உலக சுகாதார நிறுவனம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்த முந்திய பரிசோதனை மாதிரிகளை மலேசிய அதிகாரிகள் மீண்டும் பரிசோதித்ததாக அமைச்சர் கைரி சொன்னார்.

மேற்கூறப்பட்ட அந்த மாணவி தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, அவருடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்த ஐந்து பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தது.

"ஓமிக்ரான் கிருமி கண்டறியப்பட்டிருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்திடம் தென்னாப்பிரிக்கா தெரியப்படுத்துவதற்கு முன்பே அந்த மாணவி மலேசியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது," என்றார் அமைச்சர் கைரி.

"ஓமிக்ரான் பற்றி எங்களது கவனத்துக்கு வந்தவுடன், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நவம்பர் 11க்கும் 28ஆம் தேதிக்கும் இடையில், கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்ட அனைத்துப் பரிசோதனை மாதிரிகளிலும் அதிகாரிகள் மரபணுப் பரிசோதனை செய்தனர். அவ்வாறே, அந்த மாணவியிடம் ஓமிக்ரான் தொற்றைக் கண்டறிந்தோம்," என்று திரு கைரி விவரித்தார்.

அந்த மாணவியின் பரிசோதனை மாதிரியில் ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரையும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எட்டுப் பேரையும் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாகவும் திரு கைரி சொன்னார்.