டிசம்பர் 7 முதல் சிங்கப்பூர் வரும் அனைத்து 'விடிஎல்' பயணிகளுக்கும் தினசரி 'ஏஆர்டி' பரிசோதனை

டிசம்பர் 7 முதல் சிங்கப்பூர் வரும் அனைத்து 'விடிஎல்' பயணிகளுக்கும் தினசரி 'ஏஆர்டி' பரிசோதனை

1 mins read
5b5a877a-1577-4208-9541-dc08b0ac8071
'விடிஎல்' பயணத் திட்டத்தின்கீழ், நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் வந்த பயணிகள். படம்: திமத்தி டேவிட் -
Google News Preferred Icon

வரும் டிசம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளும், ஏழு நாள்களுக்கு 'ஆன்டிஜன் விரைவு பரிசோதனை' (ஏஆர்டி) செய்துகொள்ள வேண்டும்.

சுகாதார அமைச்சு இன்று (டிசம்பர் 3) இதனைத் தெரிவித்தது.

இந்தப் பரிசோதனைகளை சுயமாக செய்துகொள்ளலாம். பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவிக்கும் தொடர்பு எண்ணுக்கு இணைப்பு ஒன்று அனுப்பிவைக்கப்படும். 'ஏஆர்டி' பரிசோதனை முடிவுகளை அதில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கிய மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில், விரைவு பரிசோதனை நிலையத்திற்குச் சென்று ஒருவரது மேற்பார்வையின்கீழ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இந்த ஏழு நாள் காலகட்டத்தில், 'ஏஆர்டி' பரிசோதனையில் 'தொற்று இல்லை' என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் அன்றைய தினம் வெளியே சென்று வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொள்வதற்காக விரைவு பரிசோதனை நிலையத்திற்குச் செல்ல அனுமதி உண்டு.

டிசம்பர் 6ஆம் தேதி இரவு 11.59 மணியிலிருந்து, தரைவழி 'விடிஎல்' திட்டத்தின்கீழ் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கும் மேற்கூறப்பட்ட பரிசோதனை நடைமுறை பொருந்தும் என்று அமைச்சு கூறியது.