தொற்று அபாயம் அதிகமுள்ள நாடாக சிங்கப்பூரை அறிவித்த ஹாங்காங்

தொற்று அபாயம் அதிகமுள்ள நாடாக சிங்கப்பூரை அறிவித்த ஹாங்காங்

1 mins read
fdfa9256-46cf-40ba-acfe-e90b8af8725a
ஹாங்காங்கில் முகக்கவசம் அணிந்தபடி மக்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஓமிக்ரான் பரவல் காரணமாக, தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு ஹாங்காங் விதிமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது. இன்று (டிசம்பர் 3) அந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரையும் அது சேர்த்தது. -

சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் செல்லும் விமானப் பயணிகளுக்குப் பயண விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

இங்கு இருவருக்கு ஓமிக்ரான் வகைக் கிருமி தொற்றியிருக்கலாம் என்று முதற்கட்ட முடிவுகள் காட்டுவதால் ஹாங்காங் அரசாங்கம் இன்று (டிசம்பர் 3) சிங்கப்பூரை தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

ஐஸ்லாந்திலும் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் ஹாங்காங் அந்நாட்டையும் தொற்று அபாயம் அதிகமுள்ள 'ஏ' பிரிவு நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இதன்கீழ், வரும் 6ஆம் தேதி திங்கட்கிழமையிலிருந்து இங்கிருந்து வரும் பயணிகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

ஹாங்காங்கில் வசிக்காதவர்கள் சிங்கப்பூருக்கும் ஐஸ்லாந்துக்கும் கடந்த 21 நாளில் பயணம் செய்திருந்தால் அவர்கள் ஹாங்காங் செல்ல அனுமதியில்லை.

ஹாங்காங் வாசிகள் அங்கு செல்ல முழுமையாக தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

மேலும், அத்தகையோர் 21 நாள்களுக்குத் தனிமைக்காப்பில் இருக்கவேண்டும்.

அதனுடன், ஹாங்காங் வழியாக விமானப் பயணம் செய்யும் அனைவரும் அங்குச் செல்லும் 72 மணிநேரத்துக்குள் கிருமிப் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்றில்லை என்று தெரியவேண்டும்.

ஹாங்காங்கில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அது நேற்றும் இன்றும் மொத்தம் ஏழு நாடுகளைத் தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.