வரும் 2034ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்த ஆசியான் நாடுகள் இலக்கு கொண்டுள்ளதை உலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் (ஃபிஃபா) தலைவர் ஜியானி இன்ஃபேன்டினோ வரவேற்றுள்ளார்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட தலைமையகத்தைத் திறந்துவைக்கவும் திடலில் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரையை அறிமுகப்படுத்தவும் ஜாலான் புசார் விளையாட்டரங்கிற்கு நேற்று வருகை புரிந்தபோது திரு இன்ஃபேன்டினோ இவ்வாறு சொன்னார்.
"உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்துவது என்பது மிகப் பெரிய லட்சியம். அதற்குப் பொருளியல், காற்பந்து ரீதியாக ஆசியானுக்கு நிச்சயமாகத் தகுதி இருக்கிறது," என்றார் இவர்.
மொத்தம் 650 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஆசியானில் காற்பந்து விளையாட்டு மிகப் பிரபலமாக இருப்பதையும் இவர் சுட்டிக்காட்டினார்.
2034 உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவது எனும் சிங்கப்பூரின் குறிக்கோளை 'முன்னோக்கிய நடவடிக்கை' என்று பாராட்டிய திரு இன்ஃபேன்டினோ, அதற்கு சிங்கப்பூரில் உள்ளதுபோல்இலக்குடன் கூடிய காற்பந்துச் சங்கமும் அத்திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவும் இருக்க வேண்டும் என்று பாராட்டிப் பேசினார்.

