சிங்கப்பூர்-மலேசியா கடல்வழி பயணத் திட்டம் குறித்து ஜனவரியில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்: ஜோகூர் முதல்வர்

1 mins read
828c5fd7-df37-45f8-a4a4-94ee2f63f591
செய்தியாளர்களிடம் பேசினார் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது. படம்: தி ஸ்டார் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான கடல்வழி பயணத்தடத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து வரும் ஜனவரியில் கலந்தாலோசிக்கப்படலாம் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அண்மையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தபோது, கடல்வழி பயணத் திட்டத்துக்கான யோசனையை முன்வைத்து இருந்ததாக திரு ஹஸ்னி கூறினார்.

அத்திட்டத்தைப் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் லீ அப்போது பிரதமர் இஸ்மாயிலிடம் கூறியிருந்தார்.

இரு நாடுகளும் அத்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்தால், அது குறித்து உடனடியாக கலந்தாலோசிக்க கூட்டு பணிக்குழு ஒன்று அமைக்கப்படலாம் என்று திரு ஹஸ்னி சொன்னார்.

"இந்தச் சிறப்புப் பயணத் திட்டம், உள்ளூர் சுற்றுப்பயணத்துறையை நிச்சயமாக மேம்படுத்தும்," என்று திங்கட்கிழமை (டிசம்பர் 6) நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஜோகூரின் டெசாரு கோஸ்ட் படகு முனையத்துக்கும் சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்துக்கும் இடையே கடல்வழி பயணத்தடம் அமைக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

நவம்பர் 29ஆம் தேதி சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தரைவழி, வான்வழி பயணத்தடத் திட்டத்தைத் தொடங்கி வைக்க, மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சிங்கப்பூருக்கு வந்திருந்தார்.