இந்தியா: பிப்ரவரிக்குள் மூன்றாவது கிருமித்தொற்று அலை

1 mins read
981fd9ee-8d16-4ab2-80be-53cb2600a8b0
பெங்களூரில் டிசம்பர் 3ஆம் தேதி கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வரிசையில் நிற்கும் மக்கள். படம்: இபிஏ -

'ஓமிக்ரான்' பரவல் காரணமாக, இந்தியாவில் மூன்றாவது கிருமித்தொற்று அலை வரும் பிப்ரவரிக்குள் உச்சத்தை எட்டக்கூடும் என்று ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் முன்னுரைத்துள்ளார்.

ஆனால், அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்பது அவரது கணிப்பு.

கொரோனா தொற்றின் போக்கை கணித ரீதியில் கணிக்கும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார் பேராசிரியர் அகர்வால்.

இந்தியாவில் மூன்றாவது தொற்று அலை உச்சத்தை எட்டும்போது, அன்றாடம் 100,000 முதல் 150,000 பேர் வரை பாதிக்கப்படலாம்.

இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, டெல்டா திரிபு ஏற்படுத்திய பாதிப்பு அளவுக்கு ஓமிக்ரான் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று பேராசிரியர் அகர்வால் கருதினார்.

ஆனால், ஓமிக்ரான் பரவும் மையப் பகுதியான தென்னாப்பிரிக்காவில் நிலவரம் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பரவல் தலைதூக்கி இருந்தாலும், இதுவரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதை பேராசிரியர் அகர்வால் சுட்டினார்.

டெல்டா திரிபு பரவலின்போது கடைப்பிடிக்கப்பட்டதுபோல, இரவு நேர ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைப்பிடித்தால் கிருமிப் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்கலாம் என்றார் அவர்.