தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வேலை வாரம் குறைகிறது

1 mins read
653cd6a9-ce7e-4b92-8ad2-abac08fa475d
இந்த அறிவிப்பை யுஏஇ அரசு, பெருமைக்குரிய முடிவாகக் கருதுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஐக்கிய அரபு சிற்றரசுகளில் (யுஏஇ) அதிகாரபூர்வ வேலை வாரம், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமையாக மாறும் என்று (யுஏஇ) அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 7) அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளுக்கு வேலைநேர அட்டவணைக்கு ஒத்து இருக்கும் விதமாக, யுஏஇ அரசு அதன் வேலை வாரத்தை மாற்றுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து இந்த ஏற்பாடு நடப்புக்கு வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அமைவது வழக்கம். மாறாக, மேற்கத்திய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் வேலை நாள் அட்டவணையைப் பின்பற்றும் ஒரு சில மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் ஒன்று.

அதன்படி, அரசாங்க ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பாதி நாள் வேலை செய்வர். முஸ்லிம் ஆண்கள் அன்றைய தினம் மதியம், ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்வர்.

சனி மற்றும் ஞாயிறு வாரயிறுதி நாள்களாக இனி அமையும்.

யுஏஇ அரசாங்கம் அறிவித்துள்ள இந்த வேலை வார மாற்றத்தை அந்நாட்டில் தனியார் துறையும் பள்ளிகளும் பின்பற்றக்கூடும்.

மற்ற நாடுகளில் வேலை வாரம் ஐந்து நாள்களாக இருந்துவரும் நிலையில், ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வேலை வாரம் நாலரை நாள்களாக இருக்கும் என்ற அறிவிப்பை யுஏஇ அரசு, பெருமைக்குரிய முடிவாகக் கருதுகிறது.

"வேலையையும் வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தவும் சமூக நலனை மேம்படுத்தவும் யுஏஇ அரசு எடுத்துவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாரயிறுதி நீட்டிக்கப்படுகிறது," என்று அரசாங்க அறிக்கை கூறியது.