பிரதமர்: போதைப் புழக்கத்தைக் குறைவாக வைத்திருக்க கடும் சட்டங்கள் தேவை
சிங்கப்பூரில் போதைப் புழங்கிகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதில் கடும் சட்டங்களும் மரண தண்டனையும் முக்கியமானதாக விளங்கி வருகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள்களைச் சட்டபூர்வமானதாக்கப் பரிசீலிக்கும்படி சிங்கப்பூருக்கு நெருக்கடி அதிகரித்து வருவதை பிரதமர் சுட்டினார்.
உள்நாட்டில் போதைப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத பல நாடுகள், கட்டுப்பாட்டை ஓரளவு மீட்டெடுக்கும் முயற்சியாக போதைப்பொருள்களை, குறிப்பாக கஞ்சாவைச் சட்டபூர்வமாக்க முடிவுசெய்துள்ளன என்று திரு லீ கூறினார்.
"ஆனால், அப்படிச் செய்யும் எண்ணம் சிங்கப்பூருக்கு இல்லை. மற்றவர்கள் செய்வதைப் பின்பற்றாமல், சிங்கப்பூருக்கு எது நல்லது என்பதை நாம் முடிவுசெய்ய வேண்டும்," என்றார் அவர்.
குட்வுட் பார்க் ஹோட்டலில் நேற்று நடந்த மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 50ஆம் ஆண்டுநிறைவு நிகழ்ச்சியின்போது இவ்வாறு பேசிய பிரதமர் லீ, போதைப் புழக்கத்திற்கு எதிரான போரில் அவ்வமைப்பின் மூன்று முக்கிய உத்திகளைப் பட்டியலிட்டார்.
போதைப் புழக்கத்திற்கு எதிராகக் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது முதலாவது உத்தி.
1971 அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கப்பட்ட மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, முதல் பத்து மாதங்களிலேயே 1,000க்கும் மேற்பட்ட அதிரடிச் சோதனைகளை நடத்தி, போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தது.
ஆனாலும், தண்டனை குறைவாக இருந்ததால் போதைப் புழங்கிகளையும் கடத்தல்காரர்களையும் தடுக்க முடியவில்லை என்று திரு லீ குறிப்பிட்டார்.
பின்னர், அவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கும் வகையில் 1973ல் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டதாகவும் 1975ல் கடுமையான போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்தக் கடும் தண்டனை அறிவிப்பால் உடனடி விளைவுகளை உணர முடிந்ததாகக் கூறிய அவர், அதன்பின் சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மறுவாழ்வும் நீடித்த பொது விழிப்புணர்வும் பிரதமர் குறிப்பிட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் மற்ற இரு முக்கிய உத்திகள்.

