இதுவரை 57 நாடுகளில் ஓமிக்ரான்; மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் அதிகரிக்கக்கூடும்

இதுவரை 57 நாடுகளில் ஓமிக்ரான்; மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் அதிகரிக்கக்கூடும்

1 mins read
fd5efa59-12f4-4aaf-8fe7-ee5009d100d8
ஓமிக்ரான் பரவிவரும் வேளையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும். படம்: ராய்ட்டர்ஸ் -

ஓமிக்ரான் திரிபு இதுவரை 57 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அக்கிருமி தொடர்ந்து பரவிவரும் வேளையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் திரிபு ஏற்படுத்தும் கொவிட்-19 நோயின் கடுமையை மதிப்பிட, கூடுதல் தரவு தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் கூறியது.

மேலும், தடுப்பூசி தரும் பாதுகாப்பில் இருந்து ஓமிக்ரான் திரிபு தப்பிக்க வல்லதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் தகவல் தேவை என்று அது சொன்னது.

"ஓமிக்ரான் ஏற்படுத்தும் பாதிப்பு, டெல்டா திரிபுக்கு ஒத்து இருந்தாலோ அதைவிட குறைவாக இருந்தாலோகூட, கூடுதலானோரை ஒமிக்ரான் தொற்றினால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.

ஓமிக்ரானை 'கவலைக்குரிய திரிபாக' கடந்த நவம்பர் 26ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அது முதன்முதலில் கண்டறியப்பட்டது.