மாணவர்களின் மனநலத்துக்கு முக்கியத்
துவம் கொடுத்து அதை மேம்படுத்த கடந்த ஐந்து மாதங்களாக சிங்கப்பூரில் உள்ள
பள்ளிகள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன. கடந்த ஜூலை மாதம் ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர்
மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, மாணவர் மனநலம் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட பண்புள்ள குடிமக்கள் பாடத்திட்டத்தின்கீழ் உயர்நிலை ஒன்றாம், இரண்டாம் மாணவர்களுக்கு மனநலக்
கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்,
பல்கலைக்கழகத்துக்கு முந்திய நிலையில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் படிப்
படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார். மாணவர்களின் மனநலத்துக்குக் கல்வி அமைச்சு எப்போதும் முன்னுரிமை தந்திருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு தவணையின் தொடக்கத்திலும் மாணவர்களின் மனநிலையைப் பற்றி ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள அனைத்துப் பள்ளிகளும் நேரம் ஒதுக்குவதாக 'இட் வில் பி ஆல்ரைட்' எனும் மின்னூலின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சான் தெரிவித்தார்.
'மாணவர்களின் மனநலத்தைக் கண்
காணிக்கவும் அவர்கள் நலமுடன் இருப்ப தற்குத் தேவையான ஆதரவை வழங்கவும் நடைமுறைக்கு ஒத்துவரும் கற்பித்தல் உத்தி முறைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்
பட்டுள்ளன. மனநலம் குறித்து மாணவர்
களிடம் பேசவும் அதுதொடர்பான விவகாரங்கள் பற்றி கலந்துரையாடவும் சக மாணவர்களின் மனநிலையைக் கண்காணிக்கும் முறையை நடப்புக்குக் கொண்டு வரவும் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன," என்றார் திரு சான்.
இளையர்கள் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்நோக்குவதை அவர் சுட்டினார். கொவிட்-19 நெருக்கடிநிலையால் மாணவர்களுக்கு மனவுளைச்சல் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். சிரமம் ஏற்
படும்போது மாணவர்கள் பலர் தங்கள் நண்பர்களிடம் உதவி நாடுவது வழக்கம் என்றார் அவர். எனவே, சக மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் ஆதரவுக்கரம் நீட்டும் அணுகு முறையைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்றார் அமைச்சர் சான். மேலும்
கல்வியில் வெற்றி பெற்றால்தான் வாழ்வில் வெற்றி பெற்றதாக அர்த்தம் என்ற மனப்போக்கை மாற்ற வேண்டும் என்றார் அவர்.

