செங்காங் குழுத்தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானிடம் பொய்யுரைக்கும்படி தாம் சொல்லவில்லை என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கூறியதாக அவ்விவகாரம் குறித்து விசாரித்துவரும் உரிமைக்குழு தெரிவித்துள்ளது.
ஆயினும், திருவாட்டி ரயீசா கான் தமது தவற்றைச் சரிசெய்துகொள்ள கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திரு சிங் கூறினார்.
திருவாட்டி ரயீசா நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த விவகாரம் தொடர்பில் உரிமைக்குழு சிறப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இது, அதனுடைய மூன்றாவது அறிக்கை.
அவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தால் அதனைக் கையாள வேண்டியது திருவாட்டி ரயீசாவின் பொறுப்பு என்று திரு சிங், அவரிடமே அதனை விட்டுவிட்டதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
"அந்த விவகாரம் எழுப்பப்படாவிட்டால், தாமாக முன்வந்து அதைத் தெளிவுபடுத்தும் திட்டம் தன்னிடம் இல்லை என்றும் அது ரயீசாவின் பொறுப்பு என்றும் திரு சிங் கூறினார்," என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததைத் திருவாட்டி ரயீசா ஒப்புக்கொண்டதைக் கட்சித் தலைவர்களிடமோ பொதுமக்களிடமோ வெளிப்படுத்த வேண்டாம் என்று தாம் முடிவுசெய்ததாகவும் அது முக்கியமில்லை என்று தாம் கருதியதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை உரிமைக்குழுவின் முன்னிலையானபோது திரு சிங் விளக்கமளித்தார்.
அந்தப் பொய்யால் காவல்துறைக்குப் பெரும் தீங்கு ஒன்று நேர்ந்ததாகத் தாம் நினைக்கவில்லை என்றும் திரு சிங் சொன்னார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் தொடர்பில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பொய்யுரைப்பது சரியா என்று உரிமைக் குழு கேட்டதற்கு, காவல்துறை ஒன்றும் 'முதுகு ஒடிந்த' அமைப்பல்ல என்று திரு சிங் பதில் சொன்னதாக அவ்வறிக்கை கூறியது.
அந்தக் குற்றச்சாட்டு சரியானதுதானா என்பதை ஆராய காவல்துறை எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்தது என்று அவர் கேள்வி எழுப்பியதாகவும் அறிக்கை தெரிவித்தது.
காவல்துறைக்கு எதிரான திருவாட்டி ரயீசாவின் பொய்யான குற்றச்சாட்டுகளால் காவல்துறைக்குக் கேடு விளைவித்துவிட்டதாகத் தாம் கருதவில்லை என்றும் திரு சிங் கூறினார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினால் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு, திருவாட்டி ரயீசா கடந்த அக்டோபர் 4ஆம் தேதி திரு சிங்கிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியதையும் உரிமைக்குழுவின் சிறப்பு அறிக்கை வெளிப்படுத்தியது.
ஒன்பது மணி நேரத்திற்குமேல் நீடித்த விசாரணையில், திருவாட்டி ரயீசா நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தது மிகவும் கடுமையான விஷயம் என்று ஒப்புக்கொண்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பொய்யுரைத்ததை மூடி மறைத்துவிடுமாறு திருவாட்டி ரயீசாவைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுவதை திரு சிங் மறுத்தார்.
இம்மாதம் 3ஆம் தேதி வெளியான உரிமைக் குழுவின் முதல் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாம் பொய்யுரைத்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று பாட்டாளிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூறினர் என்று திருவாட்டி ரயீசா கூறியதாகத் தெரிவித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி, பெண்களுக்கான அதிகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசியபோது, பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் ஒருவரின் புகாரைக் காவல்துறை தவறாகக் கையாண்டதாகப் பொய் சொன்னார்.
தாம் பொய்யுரைத்தது அம்பலமாகவே, நவம்பர் 30ஆம் தேதி திருவாட்டி ரயீசா கான் தமது எம்.பி. பதவியில் இருந்தும் பாட்டாளிக் கட்சியில் இருந்தும் விலகினார்.

