பிரபஞ்ச அழகிப் போட்டி: அரையிறுதிவரை சென்ற சிங்கப்பூரின் நந்திதா

1 mins read
6663d221-069a-4a94-ac05-24d825afe7dc
பிரபஞ்ச அழகிப் போட்டி மேடையில் மின்னிய சிங்கப்பூர் நட்சத்திரம் நந்தித்தா பானா, 21. படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

எய்லாட்: இஸ்ரேலில் இன்று திங்கட்கிழமை நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் 21 வயதான நந்திதா பன்னா.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவரான நந்திதா, பிரபஞ்ச அழகிப் போட்டியின் முதல் 16 இடங்களுக்குள் ஒருவராக வந்தார்.

1987ல் மரியோன் நிக்கோல் டியோவிற்குப் பிறகு, சிங்கப்பூர் அழகி பிரபஞ்ச அழகிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இதுவே முதன்முறை.

நந்திதா அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டதாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி அறிவித்ததும் அவரது அழகுமுகம் வியப்பில் மலர்ந்தது.

ஆயினும், உடனே சுதாரித்துக்கொண்ட அவர், "என் நாட்டைப் பிரதிநிதிக்க வாய்ப்பு கிட்டியதற்கு பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். சிங்கப்பூர் அரையிறுதிக்கு முன்னேறி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இப்போது நான் பெரும் உற்சாகத்தில் இருக்கிறேன்," என்று பார்வையாளர்களிடம் உரையாற்றினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நந்திதாவின் சாதனையை மெச்சி சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்தியாவின் ஹர்னாஸ் சந்து, 21, இவ்வாண்டின் பிரபஞ்ச அழகியாகத் தேர்வுபெற்றார். பராகுவே, தென்னாப்பிரிக்க அழகிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

இஸ்ரேலில் முதன்முறையாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 80 நாட்டு அழகிகள் பங்கேற்றனர்.