பிரதமர்: 'ஓமிக்ரானை' சிங்கப்பூர் சமாளிக்கும்

பிரதமர்: 'ஓமிக்ரானை' சிங்கப்பூர் சமாளிக்கும்

3 mins read
bbf0b574-a787-4343-bc09-9484d7d65b84
-

உருமாறிய புதிய கொவிட்-19 கிரு-மியான 'ஓமிக்ரானை' சிங்கப்பூர் சமாளிக்கும் பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள், பூஸ்டர் ஊசிகளால் கொவிட்-19 கிருமியைச் சமாளிப்பதில் சிங்கப்பூர் தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது என்றார் அவர்.

கொவிட்-19 பயணத்தில் சிங்கப்பூர் ஊக்கமளிக்கும் அறிகுறிகளைக் காணத் தொடங்கியுள்ளதாகவும் திரு லீ குறிப்பிட்டார். "கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பானது கடந்த மூன்று மாதங்களில் குறைந்து வருகிறது. சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை பாதுகாத்துள்ளதுடன்,

மரண எண்ணிக்கையையும் குறைவாக வைத்துள்ளது," என்று பிரதமர் கூறினார்.சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் அன்றாட கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஏறக்குறைய 2,000 அல்லது 3,000 ஆக இருந்த ஒரு நாளின் புதிய தொற்று எண்ணிக்கை, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து 1,000க்கும் குறைவாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் 30 கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர், நவம்பர் 12ஆம் தேதியன்று இந்த எண்ணிக்கை 75 பேராக இருந்தது. டிசம்பர் 12ஆம் தேதி அன்று தீவிர சிகிச்சை பிரிவின் பயன்பாட்டு விகிதம் 46.9 விழுக்காடு என்று திரு லீ கூறினார்.

"உருமாறிய 'ஓமிக்ரான்' கிருமி ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கு சிங்கப்பூர் தயாராகி வருகிறது. கிருமியைச் சமாளிக்கும் உத்தியின் முக்கிய அங்கமாக பூஸ்டர் தடுப்பூசி இருக்கும்," என்று பிரதமர் லீ இன்று தெரிவித்தார்.

1.3 மில்லியன் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு $100 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு வழங்கும் புதிய தவணைக்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார். ஓமிக்ரான் கொரோனா கிருமியின் கடுமையை இப்போது உறுதியாகக் கூறமுடியாது என்று இந்த மாத தொடக்கத்தில் சுகாதார அமைச்சு கூறியது. எனினும், தற்போதுள்ள கொவிட் -19 தடுப்பூசிகள், மக்கள் கடுமையான நோய்வாய்ப்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. சிங்கப்பூரில் முதல் ஓமிக்ரான் தொற்று கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும், முழுமையான தடுப்பூசியும் பூஸ்டர் ஊசியும் போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு விமான நிலைய முன்களப் பணியாளருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் சென்ற வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு அறிவித்தது. அத்துடன், நாடாளாவிய பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் 18 முதல் 29 வயதுடையவர்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீட்டிக்கப்படும் என்றும் கூறியது. டிசம்பர் 10ஆம் தேதி நிலவரப்படி, மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டிர் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சிங்கப்பூரர்களின் ஒற்றுமைக்கு நன்றிகூறவும், குடியிருப்புப் பேட்டைகளின் வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்கவும் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு $100 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக திரு லீ குறிப்பிட்டார்.

"ஒரு சமூகமாக ஒன்றுபட்டு, நாம் படிப்படியாக முன்னேறலாம். படிப்படியாக, கிருமியுடன் வாழ்வதற்கான வழியைக் கண்டறியலாம். நாம் செய்ய விரும்பும் அனைத்து விஷயங்களையும் பாதுகாப்பாக மீண்டும் தொடங்கலாம்," என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.