உருமாறிய புதிய கொவிட்-19 கிருமியான 'ஓமிக்ரானை' சிங்கப்பூர் சமாளிக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள், பூஸ்டர் ஊசிகளால் கொவிட்-19 கிருமியைச் சமாளிப்பதில் சிங்கப்பூர் தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. கொவிட்-19 பயணத்தில் சிங்கப்பூர் ஊக்கமளிக்கும் அறிகுறிகளைக் காணத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, கடந்த மூன்று மாதங்களில் குறைந்து வருகிறது. சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை பாதுகாத்துள்ளதுடன் மரண எண்ணிக்கையையும் குறைவாக வைத்துள்ளது," என்று திரு லீ கூறினார்.
ஏறக்குறைய 2,000 அல்லது 3,000 ஆக இருந்த ஒரு நாளின் புதிய தொற்று எண்ணிக்கை, கடந்த மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து 1,000க்கும் குறைவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
டிசம்பர் 12ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 30 பேர் இருந்தனர், நவம்பர் 12ஆம் தேதியன்று இந்த எண்ணிக்கை 75 பேராக இருந்தது. டிசம்பர் 12ஆம் தேதி அன்று தீவிர சிகிச்சைப் பிரிவின் பயன்பாட்டு விகிதம் 46.9 விழுக்காடு என்றார் திரு லீ.
"உருமாறிய 'ஓமிக்ரான்' கிருமி ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கு சிங்கப்பூர் தயாராகி வருகிறது. கிருமியைச் சமாளிக்கும் உத்தியின் முக்கிய அங்கமாக பூஸ்டர் தடுப்பூசி இருக்கும்," என்று பிரதமர் லீ நேற்று தெரிவித்தார்.
1.3 மில்லியன் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு $100 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு வழங்கும் புதிய தவணைக்கான நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
உள்ளூரில் இருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருவரும் சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும், முழுமையான தடுப்பூசியும் பூஸ்டர் ஊசியும் போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர்கள்.
ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும் சென்ற வாரம் சுகாதார அமைச்சு அறிவித்தது. நாடளாவிய பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் 18 முதல் 29 வயதுடையவர்களுக்கும் இன்று முதல் நீட்டிக்கப்படும் என்றும் கூறியது.
டிசம்பர் 10ஆம் தேதி நிலவரப்படி, மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.

