சிங்கப்பூர்-மலேசியா தரைவழி பயணம்: கூடுதலாக 50% பேருந்துப் பயணச்சீட்டுகள்

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி பயணம்: கூடுதலாக 50% பேருந்துப் பயணச்சீட்டுகள்

2 mins read
092dcd2c-8eb4-4613-b8f0-10b98a98465c
சிங்கப்பூர்-மலேசியா தரைவழி 'விடிஎல்' திட்டம் டிசம்பர் 20ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் பாருவுக்குச் செல்வது அடுத்த வாரத்தில் இருந்து மேலும் எளிமையாகும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) பேருந்துச் சேவை வழங்கும் இரு நிறுவனங்களும் விற்பனைக்கு விடும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை 50 விழுக்காடு அதிகரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர்-மலேசியா தரைவழி 'விடிஎல்' திட்டம் டிசம்பர் 20ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் அடுத்த வாரத்தில் இருந்து கடற்பாலம் வழியாக மலேசியாவுக்குச் செல்லலாம் என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) அறிவித்து இருந்தது. அதேபோல, இத்திட்டத்தின்கீழ் மலேசியர்களும் சிங்கப்பூருக்கு வரலாம்.

தற்போது, தாங்கள் செல்லவிருக்கும் நாட்டின் குடிமக்களாகவோ நிரந்தரவாசிகளாகவோ நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களாகவோ இருப்பவர்கள் மட்டுமே தரைவழி 'விடிஎல்' திட்டம் வழியாக அங்கு செல்லலாம்.

ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் சென்ட்ரலுக்கும் சிங்கப்பூரின் குவீன் ஸ்திரீட்டிற்கும் இடையே ஒவ்வொரு திசையிலும் கூடுதலாக 10 பேருந்துகளை தான் இயக்கப்போவதாக பேருந்துச் சேவை வழங்கும் இரு நிறுவனங்களில் ஒன்றான காஸ்வே லிங்க் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து இது நடப்புக்கு வருகிறது. தற்போது, அன்றாடம் ஒவ்வொரு திசையிலும் 16 பேருந்துகளை காஸ்வே லிங்க் இயக்குகிறது.

புதன்கிழமை (டிசம்பர் 15) காலை 8 மணியில் இருந்து காஸ்வே லிங்கின் இணையப் பக்கத்தில் பயணச்சீட்டுகளை வாங்கலாம்.

சிங்கப்பூரைச் சேர்ந்த டிரான்ஸ்டார், பேருந்துச் சேவை வழங்கும் மற்றொரு நிறுவனமாகும். டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து கூடுதல் பேருந்துகளை தான் இயக்கப்போவதாக புதன்கிழமை அது தெரிவித்தது.

உட்லண்ட்சுக்கும் லார்கின் சென்ட்ரலுக்கும் இடையே ஒவ்வொரு திசையிலும் தற்போது 16 பேருந்துகளை டிரான்ஸ்டார் இயக்கி வருகிறது. அடுத்த வாரத்தில் இருந்து, ஒவ்வொரு திசையிலும் கூடுதலாக எட்டுப் பேருந்துகளை அது இயக்கும். பயணச்சீட்டுகளுக்கான விற்பனை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 17) தொடங்கும்.