அலெக்சாண்டிரா வட்டாரத்தில் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையம் அருகே, புதிய தேவைக்கேற்ப ஏற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டத்தின்கீழ் (பிடிஓ) சுமார் 1,500 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன.
அதற்கான திட்டங்களை வரைந்து வருவதாகவும் உரிய நேரத்தில் அவற்றை அறிவிக்கப்போவதாகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இன்று (டிசம்பர் 15) கூறியது.
அலெக்சாண்டிரா ரோடு, பிரின்ஸ் சார்ல்ஸ் கிரசென்ட், அலெக்சாண்டிரா வாய்க்கால் ஆகியவற்றுக்கு இடையிலான நிலத்தில் வீடுகள் கட்டப்படும்.
ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் அந்த இடம் உள்ளது.
முன்னதாக அரசாங்க வாடகை வீடுகள் உள்ள கட்டையான புளோக்குகள், கடைகள், சந்தை ஆகியவை அந்த இடத்தில் அமைந்திருந்தன.
1990களில் அந்தக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
அரசாங்க வீடுகளுக்கான வலுவான தேவையை நிறைவு செய்ய அந்த இடம் மேம்படுத்தப்படுவதாக வீவகவும் சிங்கப்பூர் நில ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறின.
நகர மறுசீரமைப்பு ஆணையம் 1998இல் வெளியிட்ட பெருந்திட்டத்தில் அந்த இடம் வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டது.

