முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் ஓமிக்ரான் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம்

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் ஓமிக்ரான் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம்

2 mins read
1b9b1cc7-4b48-4afa-a709-176d60a4e6ae
ஜகார்த்தா விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளைப் பரிசோதிக்கும் சுகாதார ஊழியர்கள். படம்: இபிஏ -

ஓமிக்ரான் கிருமி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தி, சுகாதார முறையைப் பாதுகாக்க உலக நாடுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்று அது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) வலியுறுத்தியது.

ஓமிக்ரான் திரிபு இதுவரை 77 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ் செய்தியாளர்களிடம் கூறினார். கடந்த மாதம் தெற்கு ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.

"உண்மை என்னவென்றால், பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் இருக்கக்கூடும். அது இன்னமும் கண்டறியப்படாமல் இருக்கலாம்.

"முன்பு பரவி வந்த திரிபைவிட ஓமிக்ரான் வேகமாகப் பரவுகிறது," என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

சில ஐரோப்பிய நாடுகள் ஐந்தாவது கிருமித்தொற்று அலையை எதிர்கொண்டு வருவதாகச் சொன்னார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் அப்டி மஹ்முட். இன்னும் சில நாள்களில் ஆதிக்கமுடைய திரிபாக ஓமிக்ரான் உருவெடுக்கக்கூடும் என்றார் அவர்.

இதற்கிடையே, ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரிடம் இலேசான அறிகுறிகளே தென்படக்கூடும் என அண்மையில் வெளியான தரவுகள் குறிப்பிட்டன.

என்றாலும், ஒமிக்ரான் திரிபு இலேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரக்கூடாது என்று உலக சுகாதார நிறுவன நிபுணர் புருஸ் ஐய்ல்வார்ட் எச்சரித்துள்ளார்.

ஓமிக்ரானை "இலேசான திரிபு" எனக் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார். ஓமிக்ரான் திரிபு கடுமை குறைவான நோயை ஏற்படுத்தினாலும்கூட, தொற்றால் அளவுக்கு அதிகமானோர் பாதிக்கப்படும் பட்சத்தில் மருத்துவமனைகள் மீண்டும் திண்டாடக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.