ஹாங்காங்கின் 40 மாடி உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீயில் கிட்டத்தட்ட 150 பேர் மாட்டிக்கொண்டனர்.
ஹாங்காங்கின் பரபரப்பு மிகுந்த வர்த்தக மையமான காஸ்வே பேயில் உள்ள இந்தக் கட்டடத்தின் கடைகள் அமைந்துள்ள கீழ்ப்பகுதியில் தீப்பிடித்தது.
அங்குள்ள பயனீட்டு அறை ஒன்றில் நண்பகலில் தீப்பிடித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.
தீ பரவியதும் 100க்கும் மேற்பட்டோர் 39வது மாடிக்கு விரைந்துள்ளனர். அங்கு உணவகங்கள், கடைகள், அலுவலகங்கள் உள்ளன. அங்கே அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
கடும் புகையால் பாதிக்கப்பட்டு ஏழு பெண்களும் ஓர் ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் ஒருவர் அரை மயக்கத்தில் இருந்ததாகவும் செய்திகள் கூறின.
தீயணைப்பாளர்கள் அதிசக்தி வாய்ந்த தண்ணீர்க் குழாய்களைக் கொண்டு தீயை அணைக்கப் போராடியாகவும் ஏணிகள், சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கிக்கொண்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டதாகவும் ஹாங்காங் அரசாங்கம் கூறியது. வெளியிடப்பட்ட படங்களில் கட்டடம் புகையில் மூழ்கி இருந்ததைக் காண முடிந்தது. கட்டடத்தை சுற்றி தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்திருந்தனர்.
பத்திரிகை அச்சுக்குச் செல்லும் நேரம் வரையில் தீ குறித்த முழு விவரங்கள் வெளிவரவில்லை.

