ஹோட்டல்களில் தங்கும் பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானால் ஹோட்டல் அறையில் குணமடைய வேண்டும்

ஹோட்டல்களில் தங்கும் பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானால் ஹோட்டல் அறையில் குணமடைய வேண்டும்

1 mins read
e0f6c415-8532-410f-9fe2-36867da4300a
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஹோட்டல்களில் தங்கும் பயணிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டாலோ கொவிட்-19 தொற்றிய ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு, சுகாதார அபாய எச்சரிக்கையைப் பெற்றாலோ தத்தம் அறைகளில் அவர்கள் குணமைடையவோ தனிமைப்படுத்திக்கொள்ளவோ வேண்டும்.

இந்த விதிமுறை வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 20) முதல் நடப்புக்கு வருகிறது.

பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், பயணிகள் அவரவர் அறைகளில் குணமடைய வேண்டும். அவர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு 10 நாள்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அல்லது ஒரு தவணை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு 14 நாள்களும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் பின்னர், கூடுதல் பரிசோதனைகளின்றி அவர்கள் அறைகளைவிட்டு வெளியேறலாம்.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தில் கிருமிப் பரிசோதனைகளின் தொடர்பில் முன்னதாக இருந்த விதிமுறைகள் இனி பயணிகளுக்குப் பொருந்தாது. தனிமை உத்தரவின்படிதான் அவர்கள் நடக்க வேண்டும். எனவே, தனிமை உத்தரவைப் பெற்ற பயணிகள், பரிசோதனைக்காக தங்களது அறைகளைவிட்டு வெளியேறக்கூடாது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் வியாழக்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது.

ஹோட்டலில் வசிப்பவர்களுக்கு சிங்கப்பூரில் வீடு இருந்து அங்கு குணமடைய விரும்பினால், ஹோட்டல்களின் உதவியை நாடலாம். அவை சுகாதார அமைச்சிடம் தொடர்புகொண்டு, விருந்தினர்களின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்.