பொது மருத்துவமனைகள் அவசர மருத்துவச் சேவை கட்டணத்தை உயர்த்தின

பொது மருத்துவமனைகள் அவசர மருத்துவச் சேவை கட்டணத்தை உயர்த்தின

1 mins read
d1469b09-f200-4c8b-9309-2cada09c3757
டான் டோக் செங் மருத்துவமனையில் மட்டும் 2019லிருந்து கட்டணம் மாறாமல் உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான பொது மருத்துவமனைகள், அவசர மருத்துவச் சேவைக்கான கட்டணத்தை இவ்வாண்டு உயர்த்தின. அதிகரித்துவரும் செலவுகளை ஈடுசெய்யும் விதமாக இந்தக் கட்டண உயர்வு அமைகிறது.

மருத்துவமனைகளின் விபத்து மற்றும் அவசர மருத்துவப் பிரிவுக்கு (A&E) செல்வோருக்கு விதிக்கப்படும் கட்டணம் $116க்கும் $132க்கும் இடைப்பட்டிருக்கிறது. முன்னதாக, அக்கட்டணம் $110க்கும் $126க்கும் இடைப்பட்டிருந்தது.

இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொது மருத்துவமனைகள் கட்டணத்தை உயர்த்தத் தொடங்கின.

மருத்துவரைப் பார்ப்பது, சிறுநீர் அல்லது ரத்த சக்கரை பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளை இந்தக் கட்டணம் உள்ளடக்கும்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை ஆகியவை அவசர மருத்துவச் சேவைக்காக கடந்த ஆண்டு $121 கட்டணம் விதித்திருந்தன. கூ டெக் புவாட் மருத்துவமனை விதித்த கட்டணம் $122ஆக இருந்தது. ஆனால், இந்த நான்கு மருத்துவமனைகளும் இப்போது $128 கட்டணம் விதிக்கின்றன.

சாங்கி பொது மருத்துவமனையில் தற்போது கட்டணம் $132ஆக உள்ளது. முன்னதாக, அது $126ஆக இருந்தது.

இங் டெங் ஃபோங் மருத்துவமனையிலும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையிலும் கடந்த ஆண்டு கட்டணம் $120ஆக இருந்தது. தற்போது அது $127ஆக உள்ளது.

டான் டோக் செங் மருத்துவமனையில் மட்டும் 2019லிருந்து கட்டணம் மாறாமல் உள்ளது. அது $128ஆக இருந்து வருகிறது.

அலெக்சாண்டிரா மருத்துவமனையில் கட்டணம் $116ஆக உள்ளது. முன்னதாக அது $110ஆக இருந்தது.