சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் தனிமை உத்தரவு நீக்கம்
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவில் மூன்று நாள் தடைகாப்பு உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இனி இருக்காது.
அடுத்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) முதல் அவர்கள் சிட்னி, மெல்பர்ன் நகர்களுக்கு கட்டுப்பாடின்றி விடுமுறைப் பயணம் மேற்கொள்ளலாம்.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கும் இடையில் தடைகாப்பு கட்டுப்பாடு அல்லாத இருவழிப் பயணம் மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது மீண்டும் நடப்புக்கு வருகிறது.
புதிய ஓமிக்ரான் தொற்று கண்டறியப் பட்டதைத் தொடர்ந்து நவம்பர் 28ஆம் தேதி முதல் சுயதனிமை உத்தரவை ஆஸ் திரேலியா அமல்படுத்தியது.
சிங்கப்பூருக்கான ஆஸ்திரேலியாவின் பயண முன்னோடித் திட்டத்தின்கீழ், தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் உள்ளிட்ட எல்லா வகையான பயணத்தையும் கட்டுப்பாடின்றி இனி அனுபவிக்கலாம்.
சிங்கப்பூரர் அல்லாதோரையும் உள்ளடக்கிய, தகுதிபெறும் பயணிகள் சிங்கப்பூருக்குத் திரும்பும்போது 'விடிஎல்' எனப்படும் குடியரசின் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் தடைகாப்பு உத்தரவைப் பின்பற்றும் தேவை இருக்காது.
ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் 72 மணிநேர சுயதனிமை உத்தரவைக் கைவிடுகின்றன.
இருப்பினும் அனைத்துலகப் பயணிகள் இந்த மாநிலங்களை வந்தடைந்த 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று இல்லை என்று முடிவு வரும்வரை அவர்கள் சுயதனிமையில் இருக்க வேண்டும்.
மேலும், தொற்று இல்லை என்று காட்டும் பயணத்துக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை முடிவை விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாள்களுக்குள் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த இரு மாநிலங்களிலும் 16 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

