அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தமது மக்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று பரவல் வேகம் தொடரும் நிலையிலும் புதிய ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையிலும் அமெரிக்கர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் ேபாட்டுக்ெகாள்ளுமாறு திரு பைடன் வலியுறுத்தி உள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அமெரிக்கர்கள் கடுமையான உடல்நல பாதிப்பையும் மரணத்தையும் சந்திக்கும் நிலை ஏற்படலாம் என்று அவர் எச்சரித்து உள்ளார்.
கொவிட்-19 தொற்று விவகாரத்தைக் கையாளும் குழுவினருடன் வெள்ளை
மாளிகையில் ஆலோசனை நடத்திய பின்னர் திரு பைடன் செய்தியாளர்களிடம் பேசினார்.
"வழக்கமான தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசியையும் மக்கள் போட்டுக்கொண்டால் நமது பொருளியலை மீட்கமுடியும்; நமது பள்ளிகளையும் வர்த்தகத்தையும் மீண்டும் திறக்கமுடியும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களாக தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் தொற்று காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்கு கூடியுள்ளது.
ஒவ்வொரு நாளும் 1,300 அமெரிக்கள் உயிரிழக்கும் நிலை தொடருகிறது. மாணவர்கள் மீண்டும் வீட்டிலிருந்தபடியே இணைய வகுப்புகளில் கலந்துகொள்ளுமாறு சில பல்கலைக்கழகங்கள் கூறியுள்ளன. சில நிபுணத்துவ விளையாட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் சுமார் 57 மில்லியன் அமெரிக்கர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஓமிக்ரான் தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக பூஸ்டர் கருதப்படுவதால் பலரும் அதனைப் போட்டுக்கொள்ள முன்வருகின்றனர் என புளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பதிவாகும் மொத்த கிருமித்தொற்று சம்பவங்களில் சுமார் 3 விழுக்காடு ஓமிக்ரான் தொற்று.

