வெளிநாட்டு ஊழியர்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகம்

வெளிநாட்டு ஊழியர்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகம்

2 mins read
3df36332-7cbc-4055-b5fe-405106247b9b
கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்குமுன், ஓமிக்ரான் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதிபெறும் வெளிநாட்டு ஊழியர்களில் 88 விழுக்காட்டினர் அதைப் போட்டுக்கொண்டு உள்ளனர்.

தங்குவிடுதிகளில் வசிப்போர், இதர இடங்களில் வசிக்கும் கட்டுமானம், கடல்துறை, பதனீட்டுத் தொழில்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

கொவிட்-19க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்கு 150 நாட்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊழியர்கள் தகுதி பெறுகிறார்கள்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செயல்திட்டம் கிராஞ்சி தடுப்பூசி நிலையத்தில் அக்டோபர் மாதம் தொடங்கியது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோர் விகிதமும் கொவிட்-19க்கு எதிரான முதலிரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர் அளவும் ஏற்கெனவே அதிகமாக இருக்கிறது.

இருந்தாலும்கூட கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்குமுன், ஓமிக்ரான் பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வியாழக்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்தார்.

அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் நாள் சனிக்கிழமை (டிசம்பர் 18) கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக அளித்த பேட்டியில் இந்த விவரங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.

சூழ்நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதர சிங்கப்பூரர்களுக்கு உள்ள அளவுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் நடமாட்டக் கட்டுப்பாடும் தளர்த்தப்படுவது பற்றி அல்லது வேகமாக நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி அமைச்சு பரிசீலிக்குமா என்று கேட்டபோது பாதுகாப்பான ஏற்பாடு முக்கியமானது என்பதை டாக்டர் டான் வலியுறுத்தினார்.

மனிவள அமைச்சு சென்ற ஆண்டு டிசம்பர் முதல் கட்டுப்பாடுகளை அகற்ற திட்டமிட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது என்று அமைச்சர் விளக்கினார்.

டெல்டா கிருமி தொற்றியபோது கையாண்ட அதே அணுகுமுறையை ஓமிக்ரான் தலைகாட்டும் சூழலிலும் தொடரலாம் என்று தமது அமைச்சு நம்புவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

டிசம்பர் 3ஆம் தேதி முதல் தங்கு விடுதியைவிட்டு வெளியேறி பொது இடங்களுக்குச் செல்ல மேலும் அதிக வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அன்றாடம் 3,000 பேர் அப்படி செல்லலாம். இருந்தாலும்கூட அத்தகைய சமூக வருகைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவு இன்னும் முழு அளவை எட்டவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஒப்பந்த முதலாளிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சில ஊழியர்கள் ஓய்வு நாளை கைவிட்டு மிகைநேரப் பணியை மேற்கொள்கிறார்கள்.

இப்படிச் செய்வதன் மூலம் மேலும் பணம் ஈட்டி வீட்டுக்கு அனுப்பலாம் என்பதால் ஊழியர்கள் இதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்பது முதலாளிகள், விடுதிகளை நடத்தும் நிறுவனங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.