ஈராண்டுகளுக்கு மேலாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொவிட்-19 பெருந்தொற்று, சில வட்டாரங்களில் இன்னும் சில ஆண்டுகள், அதாவது 2024 வரை நீடிக்கலாம் என தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுவாக்கில் கொவிட்-19 நிரந்தர நோயாக மாறலாம் என்று அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கூறினர்.
அதாவது, பெருந்தொற்று எனும் உலகளாவிய அவசரநிலையிலிருந்து வட்டார அளவில் தொற்றுக் குழுமங்களை ஏற்படுத்தும் சளிக்காய்ச்சல் போன்ற நிரந்தர நோயாக கொவிட்-19 அப்போது மாறலாம் என்பது அவர்களின் கணிப்பு.
கிருமி தொடர்ந்து பரவினாலும் தொற்றால் பாதிக்கப்படுவோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், மரணமடைவோர் ஆகியோரின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்படும்போது, கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டியதாகக் கருதப்படும்.
அந்த நிலையை எட்டுவதற்கு, உலக மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதன் மூலம் அல்லது முந்திய தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்ததன் மூலம் போதுமான அளவு நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்க வேண்டும்.
கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டுவதற்கான காலகட்டம், இடத்திற்கு இடம் வேறுபடும் என்கின்றனர் நிபுணர்கள்.
"அடுத்த ஓரிரு ஆண்டுகளில் உலகின் சில பகுதிகளில், கொவிட்-19 நிரந்தர நோய் என்ற நிலையை எட்டக்கூடும். வேறு சில பகுதிகளில் சமாளிக்கக்கூடிய அளவில் குறைந்த தாக்கத்துடன் அந்தத் தொற்று நீடிக்கலாம்," என்றார் ஃபைசர் நிறு
வனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கல் டால்ஸ்டன்.
புதிது புதிதாகத் தோன்றும் தொற்று வகைகளும் கொவிட்-19 தொற்று நீடிக்கும் காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
இதற்கிடையே, இரண்டு வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்குத் தயார்செய்யப் பட்ட தடுப்பூசியின் ஆற்றல், எதிர் பார்த்ததைக் காட்டிலும் குறைவாக இருப்பதால் அதன் பயன்பாட்டுக்கான அனுமதியைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வயதுப் பிரிவினரையும் சேர்த்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று தடுப்பூசிகள் போடுவதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அது கூறியது.

