சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்து சமய நிந்தையில் ஈடுபட்ட தாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள் நேற்று அதிகாலையில், நிஜாம்பூர் என்ற கிராம மக்கள் சமய நிந்தையில் ஈடுபட்டதற்காக வேறு ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.
பொற்கோயிலில் சனிக்கிழமை மாலை பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டு இருக்கும் கருவறையின் மையப்பகுதிக்குள் குதித்த ஒருவர், அங்கு இருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முற்பட்டதாகவும் அப்போது கோயில் நிர்வாகிகள் அவரைப் பிடித்து அலுவலகத்திற்குக் கொண்டு சென்ற தாகவும் வழியில் பக்தர்கள் சிலர் அவரை அடித்ததால் அந்த ஆடவர் மாண்டுவிட்டதாகவும் அமிர்தசரஸ் போலிஸ் துணை ஆணையர் பர்மிந்தர் சிங் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
அந்த ஆடவர் பொற்கோயில் கருவறைக்குள் நுழைந்தது பிரத்தியேக படச்சாதனங்களில் நேரடியாக தெரிந்ததைக் கண்ட போது கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவத்தை அறிந்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங், பொற்கோயிலுக்குள் குதித்து புனிதத்தைக் கெடுக்க இடம்பெற்றுள்ள முயற்சியின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதையும் உண்மையான சதித்திட்ட பேர்வழிகள் யார் என்பதையும் கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்தச் சம்பவம் பற்றி புலன் விசாரணை நடப்பதாக அமிர்தசரஸ் துணை ஆணையர் கூறினார்.
இவ்வேளையில், கபூர்தலா மாவட்டத்தில் இருக்கும் நிஜாம்பூர் என்ற கிராமத்தில் ஒரு சீக்கிய கோயிலுக்குள் நேற்று அதிகாலை யில் நுழைந்த ஒருவர், சீக்கியர்களின் புனிதக் கொடியை அவமதித்ததாகக் கூறி அந்தக் கிராம மக்கள் அவரைப் பிடித்தனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து அந்த ஆடவரை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
என்றாலும் கிராமத்தினர் அதே இடத்தில் அந்த ஆடவரை விசா ரிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதனையடுத்து கிராம மக்கள் அந்த ஆடவரை அதிகாரிகளிடம் இருந்து பிடித்து இழுத்து அவரை அடித்து கொன்றுவிட்டதாக நேற்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

