உயிரியல் மருத்துவத் துறைக்கு கிடைத்தது
உயிரியல் மருத்துவத் துறை நிறுவனங்கள் இந்த ஆண்டு இதுவரை சாதனை அளவுக்கு முதலீட்டைப் பெற்றுள்ளன.
அவை 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் US$600 மில்லியன் (S$820 மில்லியன்) தொகையைப் பெற்றதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த முதலீட்டுத் தொகையில் கணிசமான அளவை சிங்கப்பூரின் ஒளிமயமான சில புதிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பில் சுகாதார, உயிரியல் மருத்துவத் துறை இயக்குநராக இருக்கும் திருவாட்டி ஆர்ட்ரி லோக், நிறுவனங்கள் முதலீடாகப் பெற்ற தொகை 2016ல் US$86 மில்லியனாக இருந்தது. அது 2020ல் ஐந்து மடங்குக்கும் அதிகமாகக் கூடியது என்று தெரிவித்தார்.
எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி வருகிறது.
அது இந்த மாதத் தொடக்கத்தில் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
சிங்கப்பூரில் உயிரியல் மருத்துவப் புத்தாக்கத் தொழில்துறை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆறு மடங்கு வளர்ச்சி கண்டு இருக்கிறது. அந்தத் துறையில் இன்றைய தேதியில் 360க்கும் மேற்பட்ட உயிரியல் மருத்துவ புது நிறு வனங்களும் நடுத்தர அளவு நிறுவனங்களும் செயல்படுகின்றன என்று திருவாட்டி லோக் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுச் சூழலில் இந்தத் துறைக்குத் தேவை அதிகரித்ததும் அதற்கு ஒரு காரணம் என்றார் அவர்.
உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறை 2019ல் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 4 விழுக்காட்டுக்குப் பொறுப்பு வகிக்கிறது.
இந்தத் துறை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் போதனை, ஆய்வுத் துறை துணைத் தலைமை நிர்வாகியான பேராசிரியர் பெஞ்சமின் சீட் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் உள்நாட்டுச் சந்தை மிகவும் சிறியது என்பதால் அது ஏற்கெனவே நமக்கு ஒரு பாதகம் என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டி இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

