பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி புளோக்கில் இருந்து சைக்கிள் ஒன்றைத் தூக்கி கீழே போட்டதாக 23 வயது சிங்கப்பூரர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
ஏ. ஹரிந்தர் என்ற அந்த ஆடவர், கண்மூடித்தனமான காரியத்தைச் செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
பொங்கோலில் எட்ஜ் பிளேஸ் என்ற குடியிருப்புப் பகுதியிலுள்ள புளோக் ஒன்றில் இருந்து சைக்கிள் ஒன்றை யாரோ தூக்கி கீழே போட்டதாக பொதுமக்களில் ஒருவர் வியாழக்கிழமை காவல்துறையிடம் புகார் கூறினார் என்று நேற்று அந்தத் துறையின் அறிக்கை தெரிவித்தது.
அங் மோ கியோ காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் படச்சாதனங்களின் உதவியுடன் சந்தேகப்பேர்வழியை அடுத்த நாளன்று கைது செய்தனர்.
குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை, $2,500 வரை யிலான அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக கிடைக்கக்கூடும்.
ஹரிந்தர் டிசம்பர் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
மற்றவரின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் இத்தகைய செயல்களை காவல்துறை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது என்று அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.

