ஜனவரி முதல் எல்லை நடைமுறைகள் மேம்படுத்தப்படும்

ஜனவரி முதல் எல்லை நடைமுறைகள் மேம்படுத்தப்படும்

1 mins read
a131fecf-4c4b-4c69-ad3f-6ea33ae9f936
உட்லண்டஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நிர்வகிக்கும் குடிநுழைவு முகப்புகள் அடுத்த மாதம் முதல் மாற்றி அமைக்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதல், கடற்பாலம் வழியாக 35,000க்கும் அதிக தடவை மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) மக்கள் மேலும் பாதுகாப்பாக சென்றுவர புதிய திட்டங்கள் அங்கு இடம்பெற இருக்கின்றன.

உட்லண்டஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நிர்வகிக்கும் குடிநுழைவு முகப்புகள் அடுத்த மாதம் முதல் மாற்றி அமைக்கப்படும்.

பயணிகள் தங்கள் கடப்பிதழைத் தாங்களே சாதனத்தில் காட்டி அனுமதி பெற்று செல்லலாம்.

இதனால் விடிஎல் ஏற்பாட்டின்கீழ் தரைவழியாக சிங்கப்பூருக்கு வருவோருக்கும் குடிநுழைவு அதிகாரிகளுக்கும் இடையில் நேரடித் தொடர்பு குறையும்.

இப்போது பயணிகள் தங்களுடைய கடப்பிதழைக் குடிநுழைவு முகப்பு அதிகாரிகளிடம் கொடுத்து அனுமதி பெறுகிறார்கள்.

பயணிகளுக்குப் பாதுகாப்புமிக்க, தங்குதடையில்லாத குடிநுழைவு நடைமுறைகள் நடப்பில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பல செயல்திட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக முகப்புகளில் கண்ணாடித் தடுப்புகளும் அமைக்கப்படும்.

அந்த முகப்புகளில் செயல்படும் அதிகாரிகள், பயணியின் தடுப்பூசிச் சான்றிதழ், கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் முதலான ஆவணங்களைப் பாதுகாப்பான முறையில் பரிசோதிப்பார்கள்.